44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரண்டு அணிகளும் கோப்பையை வென்றதில்லை. 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்த ஸ்டார்க் 1 விக்கெட் எடுத்தார். ஏமாற்றமான நாளாக அமைந்தாலும் புதிய சாதனை படைக்க அந்த ஒரு விக்கெட் போதுமானதாக இருந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் ஆஸ்திரேலியா அணியின் கிளென் மெக்ராத். இந்நிலையில் அவரை விடவும் அதிகபட்சமாக ஒரு விக்கெட் எடுத்து 27 விக்கெட்டுகளுடன் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். 

இந்த உலகக்கோப்பை போட்டியில் இருமுறை 5 விக்கெட்டுகளும் இருமுறை 4 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, வங்கதேச அணியின் வீரர் முஸ்தபிஸுர் 20 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஆர்ச்சர் 19 விக்கெட்டுகளில் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.