கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. உலக கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பை தொடரில்தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோதுகின்றன. அதனால் இந்த உலக கோப்பை மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியுமே ஒவ்வொரு அணியுடனும் ஒரு போட்டியில் மோதும்.

லீக் சுற்றில் மொத்தம் 45 போட்டிகள். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப்போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக ஆடி 400க்கும் அதிகமான ரன்களை குவித்து மிரட்டியுள்ளது. 

எனவே இந்த உலக கோப்பை தொடர் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதால் ஹை ஸ்கோரிங் தொடராக இது அமையவுள்ளது. விராட் கோலி, டேவிட் வார்னர், ஸ்மித், பட்லர், ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரசல், கேன் வில்லியம்சன் என பல சிறந்த வீரர்கள் இந்த தொடரில் ஆடுகின்றனர். தோனி ஃபார்முக்கு வந்து தெறிக்கவிடுகிறார். பும்ரா, ரபாடா, ரஷீத் கான், இம்ரான் தாஹிர் என பல சிறந்த பவுலர்களும் ஆடுவதால் உலக கோப்பையில் யார் ஜொலிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

பெரும் எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கும் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்க அணியும் வலுவாகவே உள்ளது. எனவே முதல் போட்டியே மிகவும் விறுவிறுப்பாக அமைய உள்ளது.