உலகக்கோப்பைப் போட்டியில் நாளை தென் ஆப்பிரிக்காவுடன் அந்திய அணி மோத உள்ள நிலையில், வேகபந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சவுதாம்டனில் நாளை நடக்கும் இந்த போட்டிக்காக, இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க அணி, ஏற்கனவே ஆடிய 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர்.

 

இந்நிலையில், இந்திய வீரர்கள் நேற்று ரோஸ் பவுல் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு அதிகாரிகள் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என அழைத்து சென்றனர். ஜஸ்பிரித் பும்ராவிடம் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்சுற்றுச் சோதனையில் பும்ராவின் சிறுநீர் எடுத்து பரிசோதிக்கப்பட்டது, அடுத்த 45 நிமிடங்களுக்குப்பின் பும்ராவின் ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. 

இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஊக்கமருந்து சோதனை செய்ததால் பும்ரா சற்று பதற்றத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. நாளை உலக கோப்பை 2019 முதல் போட்டியை விளையாட உள்ள இந்தியாவிற்கு இது அதிர்ச்சி செய்தியாகவே உள்ளது.