உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் விலகியுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்டெய்ன் விலகியதையடுத்து அவருக்கு பதிலாக ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்திடம்  மண்ணைக் கவ்விய தென் ஆப்ரிக்கா, நேற்று முன்தினம் வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின்போது முன்னணி வேகம் லுங்கி, டு பிளெஸ்ஸி, ஹாஷிம் அம்லா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்கள் முழு  உடல்தகுதி பெற மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணிக்கு எதிராக நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

 

இந்நிலையில் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்க அணி இருந்து வருகிறது. இதனிடையே தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன், இந்த உலகக்கோப்பையின் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து ஸ்டெய்ன் அதிரடியாக விலகியுள்ளார். இதையடுத்து ஸ்டெய்னுக்குப் பதிலாக இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பெரன் ஹெண்ட்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.