மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ வேகமாக அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.
Madras Eye: Impact of the Rainy Season - Ways to Stay Safe! : 'மெட்ராஸ் ஐ' (Madras Eye) அல்லது 'பிங்க் ஐ' (Pinky Eye) என்ற கண் நோயால் கண்கள் சிவந்து, கண்ணீர் பெருக்கெடுத்து வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும். மெட்ராஸ் ஐ வந்த நபரின் கண்களை மற்றொருவர் பார்த்தால் அவருக்கும் வந்து விடும் என்று பார்ப்பதற்கு பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி, கண்களில் ஏற்படும் வலியால் எந்த வேலையும் செய்ய முடியாமல் வலியில் துடிக்க வேண்டியிருக்கும். இந்த வேதனையிலிருந்து தப்பிக்க பலர் குளிர் கண்ணாடியை அணிவார்கள்.
மழைக்காலத்தில் தான் இந்த கண் தொற்று அதிகமாகவே இருக்கும். இந்த நோயின் நுண்ணுயிரி ஆனது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கைகள் அல்லது பொருளின் தொடுதல் மூலமாக பரவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி பாடய்ப்படுத்தும் இந்த கண் நோய் எப்படி வருகிறது? குறிப்பாக மழைக்காலத்தில் இந்த நோய் ஏன் அதிகரிக்கிறது? என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
மழைக்காலத்தில் 'மெட்ராஸ் ஐ' அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?
மழைக்காலத்தில் மெட்ராஸ் ஐ அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அடினோ என்னும் ஒருவிதமான வைரஸ் தான். இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மையுடையது. இயல்பாகவே மழைக்காலத்தில் ஈரப்பத சூழல் காரணமாக வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மிக எளிதில் பரவும். அப்படி மழைக்காலத்தில் வேகமாக பரவும் ஒரு வைரஸ் தான் இந்த அடினோ வைரஸ்.
மெட்ராஸ் ஐ எப்படி பிறருக்கு பரவுகிறது?
- மழை காலத்தில் பள்ளி, கல்லூரிகள் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். மேலும் சுகாதாரமற்ற நிலையால் கண் தொற்றுகள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் லென்ஸை சரியாக சுத்தம் சுத்தம் செய்யாவிட்டால் கண் எரிச்சல் ஏற்படும்.
- அதிக கூட்டத்தில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு கண் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
- மழைநீர், அழுக்கு கலந்த நீர் மற்றும் கழிவு நீர் போன்றவற்றால் கண் தொற்று ஏற்படலாம்.
- மழைக்காலத்தில் தூசி, மகரந்தம் போன்ற ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களுக்கு மெட்ராஸ் ஐ வர வாய்ப்புள்ளது.
- மெட்ராஸ் ஐ-யால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்களை தொடுவதன் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் தொற்று பரவும்.
- மெட்ராஸ் ஐ வந்த நபரிடமிருந்து கண் சுரப்பு மற்றும் கைகள் மூலம் அந்த வைரஸானது மற்றவருக்கு பரவுகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
- பாதிக்கப்பட்ட நபர் கண்களை தொட்டுவிட்டு அந்த கையை வேறு இடத்தில் வைக்கும் போது அந்த இடத்தில் மற்றொருவர் கை வைக்கும் போது அவருக்கும் கண் தொற்று பரவ கூடும். இதனால்தான் மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
- பாதிக்கப்பட்டவரின் கண்களில் இருந்து வரும் நீர்மத்துளிகள் உடலில் பட்டிருந்தால் மற்றவர் பாதிக்கப்பட்டவரை தொடும்போது அவருக்கு எளிதாக பரவும். இதனால் தான் மெட்ராஸ் ஐ வந்த நபரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
