ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்து கொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை.
விழியில் கரைந்து, ஈரலில் நுழைந்து உடலையும் உயிரையும் வலுவாக்கும் மூலிகைகளில் ஒன்று ‘கரிசாலை’. இதன் இலக்கியப் பெயர் ‘கரிசலாங்கண்ணி’.
இதை கிராமப்புறங்களில் ‘கரப்பாந்தழை’, ‘கரிப்பான்’, ‘கையாந்தழை’ என்று குறிப்பிடுவார்கள்.
கேரள மக்கள் ‘கைதோணி’, ‘கையுண்ணி’ என்கிறார்கள். இதன் சாறு கறுமை நிறத்தில் இருப்பதால், பெயர்கள் அனைத்தும் கறுமையைக் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
இது, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டி கண்ணோய்களை அண்டவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையது.
ஈரலை வலுவாக்கி செரிமானத் தன்மையைச் செம்மைப்படுத்தும்.
மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல மருந்து.
தலை முடியைக் கறுகறுவென வளரச்செய்யும் தன்மை கொண்ட மூலிகை இது.
நெல் வயல்களிலும், காடுகளிலும் குறிப்பாகத் தண்ணீர் பாயும் இடங்களிலெல்லாம் தன்னிச்சையாகச் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை.
தமிழகத்தில், வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன.
வெள்ளை நிறப் பூப் பூக்கும் செடியை வெள்ளைக் கரிசலாங்கண்ணி என்பர். இதன் தாவரவியல் பெயர் ‘எக்லிப்டா ப்ரோஸ்ட்ராட்டா (எல்) லின்’ (Eclipta prostrata (L) Linn). இதுதான் அனைத்து இடங்களிலும் காணக்கிடைக்கும்.
மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்பர். இதைப் பொற்றலைக்கையான் என்றும் சொல்வார்கள். இதன் தாவரவியல் பெயர் ‘வேடெலியா சினேஸிஸ் (ஒஸ்பெக்) மெர்’ (Wedelia Chinensis (Osbeck) Merr). இதை நாம் நடவு செய்துதான் வளர்க்க வேண்டும். இதுதான் அறிவு வளர்ச்சிக்காகச் சித்தர்களால் பாடப்பட்டுள்ள மூலிகை.
நடைமுறையில் கரிசாலை என்பது, இரண்டு வகைகளையுமே குறிக்கிறது. உடலின் உள்பகுதிகளுக்குச் சாப்பிடும் மருந்துகள் மஞ்சள் கரிசாலையிலும்; வெளிப்பகுதிகளுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் வெள்ளைக் கரிசாலையிலும் தயாரிக்கப்படுகின்றன.
சித்த மருந்துகளில் உயர் மருந்துகளான செந்தூரங்கள் தயாரிக்க மஞ்சள் கரிசாலையே சிறப்பாக உள்ளது.
கரிசாலையை வடமொழியில் ‘பிருங்கராஜ்’ என அழைக்கிறார்கள். அதனால், ‘பிருங்க’ என்று பெயரால் வழங்கப்படும் அனைத்து மருந்துகளிலும் கரிசாலை சேர்க்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கண் நோயைக் குணமாக்கும் கரிசாலை மை!
மூன்று நாட்களுக்கு ஒருமுறை, கரிசாலையில் தயாரிக்கப்பட்ட மையைக் கண்களுக்கு இடும் பழக்கத்தை நமது முன்னோர் கடைப்பிடித்து வந்தனர்.
கண் நோய்கள், பார்வைக் குறைவு, தலைவலி, மூக்கடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கத்தான் இதை ஆண்களும் பெண்களும் கடைப்பிடித்து வந்துள்ளனர். ஆனால், காலப்போக்கில் மையிடுவது அழகியல் பழக்கமாக நம்பப்பட்டுப் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். ஆனாலும், பெண்கள் தற்போது இடுவது மூலிகை மையல்ல. ரசாயன கண் மைதான்.
மெல்லிய பருத்தித்துணியை வெள்ளைக் கரிசாலைச்சாற்றில் நன்கு மூழ்க வைத்து உலர விட வேண்டும். இப்படி ஏழுமுறை மூழ்க வைத்து உலர விட்டால், அந்தத் துணி கறுமை நிறத்துக்கு மாறியிருக்கும். அதைத் திரியாக்கி விளக்கெண்ணெயில் தீபமேற்றி. . மூடுகலனுக்குள் விளக்கெண்ணெயைத் தடவி வைக்க வேண்டும். தீபம் எரிந்து முடிந்தவுடன் மூடு கலனுக்குள் படிந்துள்ள கரிதான் மை. இதை, செப்புச்சிமிழில் பத்திரப்படுத்தி வைத்து, மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை வேளையில், விளக்கெண்ணைய் கலந்து கண்களில் தீட்டி வந்தால், கண் பார்வை தெளிவாகும். கண் நோய்கள் வராது.
இளநரை போக்கும் இன்மருந்து!
இளநரை பலருக்கும் பெரிய பிரச்னை. ஆனால், உடலியலில் இது ஒரு நோயே அல்ல. இதற்கு வெள்ளைக் கரிசாலையை நிழலில் உலர்த்திப் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 5 கிராம் பொடியை எடுத்து, தேனில் கலந்து காலை, மாலை இரு வேளைகளிலும் உணவுக்குப் பிறகு 3 மாதங்கள் சாப்பிட வேண்டும்.
அதேபோல, கரந்தை இலைப் பொடியை 3 மாதங்கள் நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் இளநரை (40 வயதுக்கு மேல் ஏற்படும் நரையல்ல) மாறும்.
உள் மருந்தோடு, கரிசாலை சேர்த்துக் காய்ச்சப்படும் தைலங்களைக் காலைப்பொழுதில் தலைக்குத் தேய்த்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
