Here are the medical benefits of the flower that you have never heard of ...

கொன்றை மலர் 

ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியல் குடும்பத்தைச்சேர்ந்த பூக்கும் தாவரம். கொன்றையில் சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை எனப் பல கொன்றைகள் இருந்தாலும் சரக்கொன்றைதான் மிகவும் பிரசித்திபெற்றது. 

சரம் + கொன்றை = சரக்கொன்றை. சிவன் கோவில்களில் தல மரமாக விளங்கும் சரக்கொன்றையை இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள்.

கோடைக் காலங்களில் குறிப்பாகச் சித்திரை மாதத்தில் சரம் சரமாகப் பூத்துக்குலுங்குவதால் சரக்கொன்றையைச் சித்திரைப்பூ, திருக்கொன்றை, சுவர்ண புஷ்பம் என்றும் அழைக்கிறார்கள். 

கோடையின் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சரக்கொன்றை மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஓரடி நீளத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். 

புத்தாண்டில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்பது நம்பிக்கை. கேரளாவிலும் விஷுக்கனி தரிசனத்தில் கொன்றை மலர் இடம்பெறுகிறது. சரக்கொன்றையின் பூ, இலை, மரப்பட்டை என அனைத்துக்கும் மருத்துவக்குணங்கள் உள்ளன.

நன்மைகள்:

** சரக்கொன்றைப்பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டுவர காது நோய்கள் குணமாகும்.

** கொன்றைப்பூவை ஆவியில் வேக வைத்து அதன் சாறைப்பிழிந்து அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.

** தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள் கார்போக அரிசியுடன், கொன்றைப்பூவைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் குணம் கிடைக்கும். இலை விழுதையும் சரும நோய்களுக்குப் பூசி வருவதன்மூலம் பலன் கிடைக்கும்.

** இலையை மையாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

** கொன்றைப்பூவை மையாக அரைத்து காய்ச்சியப் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம்பெறுவதோடு, உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

** கொன்றைப்பூவை மையாக அரைத்து 10 கிராம் அளவு எடுத்துப் பசுவெண்ணெயில் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் உள்ளிட்ட மேக நோய்கள் நீங்கும்.