Here are some of the best ways to get rid of eye disease ...

கண் நோய் 

கண் நோய் என அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. 

வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படும் இது குழந்தைகளைப் பரவலாக பாதிக்கிறது. கண்ணின் வெள்ளைப் பகுதியில் தோன்றும் இந்த பாதிப்பு, கண்ணையும் இமைகளையும் கலங்கிய வண்ணம் ஈரப்பதத்துடன் வைக்கிறது.

இது ஆபத்தான ஒன்று இல்லையென்றாலும், சரியாக கவனிக்கப்படாவிட்டால் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தொந்தரவு தரக்கூடியது. முதலில் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இது மற்ற கண்ணிற்கும் பரவும். 

இதனை வீட்டு வழிமுறைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

பொதுவாக இந்த பாதிப்பை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பாக்டீரியா தொற்றினால் வருவது, அலர்ஜி அல்லது ஒவ்வாமையினால் வருவது மற்றும் வைரஸ் தொற்றினால் வருவது. 

ஸ்டாபிலொகோக்கல் அல்லது ஸ்ட்ரெப்டொகோக்கல் பாக்டீரியாவினால் வருவது பாக்டீரியா தொற்றாகும். 

தூசு அல்லது புகையினால் வரும் ஒவ்வாமை ஒரு வகை பாதிப்பு. 

வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றொன்று. 

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு உடனடியாக ஒருவரிலிருந்து மற்றவர்களுக்கு பல்வேறு தொடர்புகள் மூலமாகப் பெரும்பாலும் தூய்மையின்மையின் காரணமாக பரவுகிறது.

கண் நோய்யின் அறிகுறிகள்

* கண்களில் அதிக நீர்ச்சுரப்பு

* கண் சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கம்

* தொடர்ந்த கண் வலி

* இமைகளில் காணப்படும் பிசுபிசுப்பு

* வெளிச்சத்தில் கண் கூசுதல்

* வெண்மையான கழிவு காணப்படுதல் (வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று)

* கண்களில் பச்சை அல்லது மஞ்சள் நிற கழிவு (பாக்டீரியா தொற்று).

தீர்வுகள் 

** ஐஸ் பேக்

இதனால் நோய் குணமாகாது என்றாலும் வீக்கம், அரிப்பு மற்றும் கண் சிவப்பைக் குறைக்க இது ஒரு சிறந்த வழி. ஒரு தூய்மையான துணியை எடுத்து குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) நனைத்து லேசாக பிழிந்து அதனை கண்ணின் மீது போடுங்கள். இதை மாற்றி மாற்றி செய்து வாருங்கள். அவ்வப்போது துணியையும் நீரையும் மாற்றுங்கள்.

** தேனும் பாலும்

வெதுவெதுப்பான பால் மற்றும் தேனை சம அளவு எடுத்து கலந்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை சற்று பஞ்சு அல்லது சிறிய கண் குவளையை வைத்து கண்ணைக் கழுவ பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் கண்ணில் சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம். சில துளிகளை கண்ணில் விடுவதன் மூலமோ அல்லது இந்த கலவையில் நனைத்த துணியினை கண்களின் மீது வைப்பதன் மூலமோ சற்று நிவாரணம் பெறலாம்.

** கொத்தமல்லி

கை நிறைய உலர்ந்த கொத்தமல்லியை எடுத்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி குளிர வைக்க வேண்டும். பின்னர் இந்த நீரால் கண்ணை நன்கு கழுவி அழுத்தம் கொடுக்க வேண்டும். இது எரிச்சலையும், வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க வல்லது.

** சூடான ஒத்தடம்

சூடான ரோஸ் எண்ணெய், தாழம்பூ எண்ணெய் அல்லது சீமைச்சாமந்தி எண்ணெயை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். அதிலும் 5 முதல் 10 நிமிடங்களுக்கு என ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இதனைச் செய்யலாம். இது பாதிப்பைக் குறைப்பதுடன் தொற்றையும் நீக்கும்.

** சீரகம்

நீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து காய்ச்சி அதனை ஆற வைக்கவும். பின்னர் அதனுடன் வடிகட்டி, கண்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவவும். இது வலியையும், சிவப்புத் தன்மையையும், எரிச்சலையும் நீக்கும்.

** ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலக்கவும். இதனை சிறிது பஞ்சில் நனைத்து கண்களைக் கழுவவும். மதர் எனப்படும் மாலிக் ஆசிட் கொண்டுள்ள ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியத் தொற்றுக்களுடன் போராட வல்லது.

** தேன்

தேனை இரு வகையாக நீங்கள் பயன்படுத்தலாம். முதலில் கண்ணில் சொட்டாக விடலாம் அல்லது இரண்டு கப் சுடுநீருடன் மூன்று ஸ்பூன் தேனைக் கலந்து கண்ணைக் கழுவலாம். குறிப்பாக தண்ணீர் குளிர்ந்தவுடன் உபயோகிக்கவும்.

** உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வில்லைகளை எடுத்து கண்ணில் பற்று போலப் போடவும். அதிலும் இதனை மூன்று நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யவும்.

** மஞ்சள்

இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் ஒரு கப் சுடுநீரைச் சேர்க்கவும். பின்னர் வெதுவெதுப்பாக கண்ணில் அழுத்தி கண்களை சுத்தம் செய்யவும்.

** சோற்றுக் கற்றாழை

ஆலோ வெரா எனப்படும் இதன் சாற்றை கண்ணைக் கழுவவும் ஒத்தடம் கொடுக்கவும் பயன்படுத்தலாம். மேலே கூறப்பட்டது போல் இந்த சாற்றை துணியில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பின்னர் இதனை ஆறவைத்த சுடு நீருடன் கலந்து கண்ணைக் கழுவலாம். வேண்டுமென்றால் அரை ஸ்பூன் போரிக் ஆசிட்டையும் இதில் சேர்க்கலாம்.

** நெல்லிக்காய்

ஒரு கப் நெல்லிக்காய் சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேனைச் சேர்த்து நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

** எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றினை கண்களின் மேல் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எலுமிச்சை சாற்றினை பயன்படுத்தும் போது எரிச்சல் இருக்கும். ஆனால் இந்த செயலை செய்வதால், கண்களில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்

** உப்பு

சிறிது உப்பை கொதிக்கும் நீரில் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த கலவையை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்து வந்தால், கண்களில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும்.

** தயிர்

தயிர் கூட மெட்ராஸ் ஐக்கு நல்ல நிவாரணத்தைத் தரும். அதற்கு தயிரை கண்களின் மேல் தடவி வர வேண்டும்.