குழந்தைகள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் பாதிக்கும் முக்கிய பிரச்னை உடல்பருமன். பல தொற்றா நோய்களுக்கு மூல காரணமாகும். இந்தக் கோளாறு இந்தியாவில் அதிகமாகி வருகிறது.

உடல்பருமன் தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்:

* எப்பொழுது நம் உடல் எடை, சராசரி எடையைவிட 20 சதவிகிதம் அதிகரிக்கிறதோ அந்த நிலையைத்தான் `ஒபிசிட்டி’ என்கிறோம். அதாவது, திசுக்களில் அதிகப்படியாகக் கொழுப்புக்கள் சேரும் நிலை.

* `உலக அளவில் ஆறு பேரில் ஒருவர் ஒபிசிட்டி பிரச்னையால் பாதிக்கப்படுகிறார் என்றும் சராசரியாக 2.8 மில்லியன் மக்கள் (28 லட்சம் பேர்) ஒபிசிட்டி காரணமாக நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்கள்’ என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* இதன் இறப்பு விகிதத்தைக் கணக்கில்கொண்டு இது ஒரு நோயாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

* நம் உடலுக்குத் தேவையான கலோரிகளைவிட நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவு அதிகமாவதால், உடல்பருமன் ஏற்படுகிறது.

காரணங்கள்…

இது உடனடியாக ஏற்படும் ஒன்றல்ல. பல மாதங்களாக உடலில் சேரும் கொழுப்பே உடல்பருமன் ஏற்படக் காரணமாகிறது. இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

* ஒரு குழந்தையின் தாய், தந்தை இருவரும் பருமனாக இருந்தால், அந்தக் குழந்தை பருமனாக 80 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தை யாரேனும் ஒருவர் பருமனாக இருந்தால் 50 சதவிகித வாய்ப்பிருக்கிறது. எனவேதான் பரம்பரையாக உள்ள ஜீன்களின் வழியாக ஒபிசிட்டி ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

* பரம்பரை ஜீன்களில் சிலருக்கு `புரோட்டீன் லெப்டின்’ (Protein Leptin) குறைபாடு காணப்படும். இவர்களுக்கு பசியைத் தாங்கும் சக்தி குறைவாக இருக்கும்; எப்போதும் பசிக்கிற உணர்வு மேலோங்கியிருக்கும். இதனாலும் உடல்பருமன் உண்டாகும்.

* அதிகமாக ஓட்டல் உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள், உணவு மீதமாகிறதே என்பதற்காக அதையும் சேர்த்து அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறவர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடாதவர்கள், இனிப்பு, துரித உணவுகளை உண்பவர்களுக்கு உடல்பருமன் ஏற்படலாம்.

* மன உளைச்சல், மனஅழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு அதிகமாகப் பசிப்பது போன்ற உணர்வு இருக்கும். இவர்கள் கட்டுப்பாடின்றிச் சாப்பிடுவதால் ஒபிசிட்டி ஏற்படலாம்.

* உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு, பருமன் ஏற்படுவது சகஜம். அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்காதவர்கள், அதிகமாக வாகனங்களைப் பயன்படுத்தி, குறைவாக நடப்பவர்கள் ஆகியோருக்கு உடல்பருமன் உண்டாகும்.

* உடல்பருமனுக்கு வயது வரம்போ, பால் பாகுபாடோ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

* உடல் எடை, சராசரி எடையைவிட 10 சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். 20 சதவிகிதம் அதிகமானால், அது உடல்பருமனாகக் கருதப்படுகிறது

உடல்நிறை குறியீட்டு எண் (B.M.I.)

இது, உடல் எடையை (கி.கி) நம் உயரத்தின் (மீ) வர்க்கத்தால் வகுத்தால் கிடைக்கும் எண். இது

* 25-க்குக் குறைவாக இருந்தால் நார்மல்.

* 25 முதல் 29.8 வரை கிரேடு 1 (முதல்நிலை) பருமன்,

* 30 முதல் 40 வரை கிரேடு 2 பருமன்.

* 40-க்குஅதிகமானால் கிரேடு 3 நிலையாகக் கருதப்படுகிறது

தவிர்க்கும் முறைகள்…

* சிறிது உடற்பயிற்சியும், உணவு முறைகளில் மாற்றமும் செய்து கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

* மருத்துவர் மற்றும் உணவு நிபுணரின் ஆலோசனையைக் கடைப்பிடிக்கலாம். இல்லையென்றால், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்படும். மேலும், ஆஸ்டிரோ ஆர்த்தரைட்டீஸ், வெரிகோஸ் வெயின், சர்க்கரைநோய் போன்றவையும் ஏற்படலாம். இந்த வகையைச் சேர்ந்தவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

* மிகவும் மோசமான நிலையிலுள்ள இந்த வகையினர் சுறுசுறுப்புக் குறைவாக இருப்பதால், நோய்களால் பாதிக்கப்படுவர்.

பரிந்துரைக்கப்படும் சில உணவுகள்…

* வெஜிடபுள் சாலட்

* கீரைப் பொரியல்

* ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம்)

* பருப்புகள், நீர்த்த சூப் வகைகள்.

* கலோரி குறைவான உணவுகளோடு உடற்பயிற்சியும் சேரும்போது வேகமாக உடல் எடை குறையும்.

* ஏரோபிக் பயிற்சிகளில் அதிகமாகச் சக்தி செலவழிக்கப்படுவதால், உடல் எடை சமநிலையில் இருக்கும்.

* ஜாகிங், வாக்கிங், சைக்கிளிங் போன்றவை பருமன் குறைவதைத் துரிதப்படுத்துபவை.

* இவற்றை ஆரம்பிக்கும்போது 10 நிமிடங்களிலிருந்து தொடங்கி தொடர்ந்து சிறிது சிறிதாகக் கூட்டி 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

* வாக்கிங் முடித்தவுடன் சூப்போ, ஜூஸோ, நீரோ அருந்தலாம். அவை உடலின் நீர்த்தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

* வாக்கிங் முடித்தவுடன் எப்போதும்போல தினசரி வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். ரெஸ்ட் எடுக்கத் தேவையில்லை.