33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!
சீனாவில் நீண்ட நேரம் தூங்கும் வினோத போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்ற முக்கிய விதியுடன், 240 பேர் பங்கேற்றனர். இறுதியில், ஒரு இளைஞர் 33 மணிநேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து தூங்கி வெற்றி பெற்றார்.

நீண்ட நேரம் தூங்கும் போட்டி
சீனாவில் பலவித நூதனமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வரிசையில், சீனாவில் உள்ள பாட்டோ (Baotou) நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிகவும் வினோதமான ஒரு போட்டி நடத்தப்பட்டது.
தூக்கப் போட்டியின் முக்கிய விதிகள்
நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் படுத்தே இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் போட்டியின் முக்கிய விதி. இந்தப் போட்டியில் படுத்திருக்கும் போட்டியாளர்கள் தங்கள் செல்போனைப் பயன்படுத்தலாம், புத்தகங்களைப் படிக்கலாம், உணவை வரவழைத்துச் சாப்பிடலாம்.
ஆனால், போட்டியாளர்கள் உட்காரவோ, எழுந்து நிற்கவோ அல்லது கழிவறைக்குச் செல்லவோ அனுமதி இல்லை. இந்த விதிகளை மீறுபவர்கள் உடனடியாகப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
33 மணிநேரம் தூங்கிய நபர்
கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 240 பேர் பங்கேற்றனர். இவர்களில், 24 மணிநேரத்திற்குள் மட்டும் 186 பேர் போட்டியில் இருந்து வெளியேறினர். 54 பேர் மட்டும் அதற்குப் பிறகும் தூங்கிக்கொண்டே இருந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை தூங்கிக்கொண்டே இருந்து வெற்றி பெற்றார். அவருக்கு 3000 யுவா, இந்திய மதிப்பில் சுமார் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

