பூமியை விட 1000 மடங்கு இளம் கோள் கண்டுபிடிப்பு! முதல் முறையாக படம்பிடித்து சாதனை!
ஆராய்ச்சியாளர்கள் பூமியை விட 1000 மடங்கு இளம் கோளான 'WISPIT 2b'-ஐ நேரடியாகப் படம் பிடித்துள்ளனர். கோள்கள் உருவாகும் இடைவெளியில் கண்டறியப்பட்ட முதல் கோள் இதுவாகும்.

பூமியை விட 1000 மடங்கு இளம் கோள் கண்டுபிடிப்பு
பூமியைவிட சுமார் 1000 மடங்கு குறைந்த வயதுடைய 'WISPIT 2b' என்ற இளம் கோள் (protoplanet) ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் நேரடியாகப் படம் பிடித்துள்ளனர். கோள்கள் உருவாகும் இடைவெளிகளில் (disk gaps) படம்பிடிக்கப்பட்ட முதல் கோள் இதுவாகும்.
கோள்கள் உருவாகும் செயல்பாட்டின்போது வளையம் போன்ற இடைவெளிகளை அவை ஏற்படுத்துகின்றன என்ற கோட்பாட்டை இந்தப் புதிய கோள் உறுதிப்படுத்துகிறது.
WISPIT 2b-ன் விவரங்கள்
WISPIT 2b என்பது பிரம்மாண்டமான வாயுக்கோள் ஆகும். இதன் வயது சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் இருக்கும். இது பூமியை விட கிட்டத்தட்ட 1,000 மடங்கு இளையது. இதன் எடை சூரியக் குடும்பத்தில் பெரிய கோளான வியாழன் கோளின் எடையை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம்.
நமது பூமியில் இருந்து சுமார் 437 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த இளம் கோள், சுற்றியுள்ள கோள் அமைப்பில் இருந்து தொடர்ந்து பொருள்களைச் (matter) சேகரித்து, இன்னும் வளர்ந்து வருகிறது. ஆரம்ப கால கோள் உருவாக்கத்தைப் படிக்க இது ஒரு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.
புகைப்படம் எடுத்த தொலைநோக்கிகள்
WISPIT 2 மற்றும் அதன் இளம் கோளின் புகைப்படம், சிலியில் உள்ள மெகல்லன் தொலைநோக்கி (Magellan Telescope) மற்றும் அரிசோனாவில் உள்ள லார்ஜ் பைனாகுலர் தொலைநோக்கி (Large Binocular Telescope) ஆகியவற்றைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானியலாளர் லெய்ர்ட் க்ளோஸ் மற்றும் லெய்டன் ஆய்வகத்தின் விஞ்ஞானி ரிசெல் வான் கபெல்வீன் ஆகியோரின் தலைமையில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இந்தப் படத்தில், WISPIT 2b ஆனது, நட்சத்திரத்தைச் சூழ்ந்துள்ள பிரகாசமான வெள்ளை வளையத்தின் உட்புறத்தில் உள்ள ஒரு சிறிய ஊதா நிறப் புள்ளியாகக் காட்சியளிக்கிறது. இளம் கோளுக்கு அப்பால் மங்கலான வெளிப்புற வளையமும் தெரிகிறது.
WISPIT 2b கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்
WISPIT 2-ஐச் சுற்றியுள்ளதைப் போன்ற தூசு மற்றும் வாயுவால் ஆன கோள் வட்டுக்கள் (Protoplanetary disks) கோள்கள் பிறக்கும் இடங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வட்டுக்களில் காணப்படும் இடைவெளிகள், புதிதாக உருவாகும் கோள்கள் பொருள்களை ஒதுக்கித் தள்ளுவதன் அறிகுறியாக சந்தேகிக்கப்பட்டு வந்தது. "தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ்" (The Astrophysical Journal Letters) இதழில் வெளியிடப்பட்டுள்ள WISPIT 2b குறித்த கண்டுபிடிப்பு, அந்தக் கோட்பாட்டிற்கான முதல் நேரடி ஆதாரத்தை வழங்குகிறது.
MagAO-X உள்ளிட்ட மேம்பட்ட தகவமைவு ஒளியியல் (advanced adaptive optics technology) பயன்படுத்தப்பட்டதன் மூலம் இந்தக் கண்டுபிடிப்பு சாத்தியமானது. புதிய கோள் வளர்ந்து வரும்போது வெளியாகும் ஹைட்ரஜன்-ஆல்ஃபா ஒளியைக் (Hydrogen-alpha light) கண்டறிவதன் மூலம் இந்தக் கருவி கோளின் அக்ரீஷன் (accretion) நிகழ்வைப் பதிவுசெய்துள்ளது.
WISPIT 2b அது இருக்கும் இடத்திலேயே உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது கோள் உருவாக்கத்தின் இயக்கவியல் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.