சிறந்த மாணவர் கொலையாளி ஆனது எப்படி? சார்லி கிரிக் படுகொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்
சார்லி கிர்க் கொலை வழக்கில், முக்கிய சந்தேக நபரான டெயிலர் ராபின்சன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர், தீவிரவாத சிந்தனைகளால் எவ்வாறு கொலையாளியாக மாறினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெயிலர் ராபின்சன்
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க்கின் படுகொலை வழக்கில், முக்கிய சந்தேக நபரான டெயிலர் ராபின்சன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு மாணவர், தீவிரவாத சிந்தனைகளால் எவ்வாறு ஒரு கொலையாளியாக மாறினார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ராபின்சன் கைது செய்யப்பட்டது எப்படி?
சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, சந்தேகநபர் ராபின்சன் தனது தந்தையின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தாக்குதலுக்கு முன், பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் அணிந்திருந்த அதே உடையைத்தான் கைதாகும்போதும் அணிந்திருந்தார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ராபின்சன்
ராபின்சன் தனது குடும்பத்தினர் சிலரிடம், தான் இந்த குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்ப நண்பர் ஒருவரே வீட்டிலிருந்து அழைத்துச் சென்று சரணடைய வைத்துள்ளார். இந்த தகவல்களை உட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் மற்றும் FBI அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்
உட்டாவில் பிறந்த ராபின்சன், ஒழுக்கமானவராகவும் கல்வியில் சிறந்தவராகவும் பெயர் பெற்றுள்ளார். 2022-ஆம் ஆண்டில் அவரது தாயார் சமூக வலைத்தளத்தில் தனது மகனைப் பற்றி எழுதியுள்ள பதிவில், ராபின்சன் ACT தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, 4.0 GPA-வை அடைந்து, உட்டா மாநில பல்கலைக்கழகத்தில் 32,000 டாலர் உதவித்தொகையுடன் படிப்பில் சேர்ந்திருப்பதாக பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
ராபின்சனின் அரசியல் சார்பு
அதிகாரபூர்வ வாக்காளர் பதிவுகளில், ராபின்சன் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவரது உறவினர்கள், அவரது அரசியல் கருத்துக்கள் சமீப காலமாக தீவிரமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஒரு குடும்ப விருந்தில், ராபின்சன் கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளரான சார்லி கிர்க்கை, "வெறுப்பு நிறைந்தவர்" என்று கூறி, அவரது தீவிரமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
வன்முறைக்கான காரணம்
துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத தோட்டா உறைகளில், “ஹேய், பாசிஸ்ட்!” (“Hey, fascist! Catch!), “பெல்லா சியாவ்” (Bella ciao) போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. "பெல்லா சியாவ்" என்பது இத்தாலி எதிர்ப்புக் குழுக்களின் புகழ்பெற்ற பாடல். இதனால், ராபின்சன் பாசிச எதிர்ப்பு மனநிலையில் குற்றத்தைச் செய்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
FBI அறிக்கை சொல்வது என்ன?
FBI அறிக்கையின்படி, சிறந்த மாணவராக இருந்த ராபின்சன், கடந்த சில ஆண்டுகளில்தான் தீவிரமான பாசிச எதிர்ப்பு சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாற்றம்தான் அவரை இந்த கொடூரமான குற்றத்தைச் செய்யத் தூண்டியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.