இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்! களமிறங்கிய ஐ.நா! இரு நாடுகளிடமும் சொன்னது என்ன?
இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

India-Pakistan War Tension
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் கோழத்தனமான தாக்குதலால் வெகுண்டெழுந்த இந்தியா பாகிஸ்தான் உடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்தது. சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு மீள முடியாத அடியை கொடுத்த இந்தியா, நமது ராணுவம் மூலம் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட தயராகி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்
இதனால் பதற்றத்தில் உள்ள பாகிஸ்தான் 'இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்' என மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் தங்களுக்கு ஆதரவாக சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் பாகிஸ்தான் ஆதரவு கேட்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியா பக்கமே உள்ளன. சீனா பாகிஸ்தான் பக்கம் நிற்கும் என்றாலும் அந்த நாடு இன்னும் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா அட்வைஸ்
இதற்கிடையே ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டுகிறது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இரு நாட்டின் உறவுகளும் கொதிப்பாக உள்ளதை பார்த்து நான் வேதனைப்படுகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல் நடத்தியவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்
தொடர்ந்து அன்டோனியோ குட்டெரஸ் தனது அறிக்கையில், ''இந்த நெருக்கடியான நேரத்தில் இராணுவ மோதலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். எஏனெனில் இது நிலைமையை எளிதில் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வைக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் ராணுவம் தீர்வாக அமையாது. இரு நாடுகளும் பின்வாங்கி அமைதியை நோக்கி நகர வேண்டிய நேரம் இது. அமைதியை மீட்டெடுப்பதற்கும், தூதரக முயற்சிகளை ஆதரிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது'' என்றார்.
மேலும் ''இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாட்டின் அரசுகளையும் நான் மதிக்கிறேன். இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்கு, குறிப்பாக ஐ.நா. அமைதி காக்கும் பணிக்கு அவர்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' என்று அன்டோனியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.