நாசாவில் 2000 க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் பணிநீக்கம்! டிரம்ப் அதிரடி முடிவு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், நாசாவில் 2,145 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாசா அனுபவம் மிக்க விஞ்ஞானிகள் பலரை இழக்க நேரிடும்.

நாசா விஞ்ஞானிகள்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், நாசாவில் உள்ள குறைந்தபட்சம் 2,145 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக 'பொலிடிகோ' (Politico) ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதனால், நாசா அனுபவம் மிக்க விஞ்ஞானிகள் பலரை இழக்கக்கூடும் எனக் கூறப்படும். இது நாட்டின் விண்வெளி கொள்கையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை
டிரம்ப் நிர்வாகம், ஜி.எஸ்-13 முதல் ஜி.எஸ்-15 வரையிலான பதவிகளில் உள்ள மூத்த அரசு ஊழியர்களை பெருமளவில் குறைக்க திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முன்கூட்டிய ஓய்வு, பணி நீட்டிப்பு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா (deferred resignations) உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2,145 நாசா ஊழியர்கள் பணிநீக்கம்
விண்வெளி நிறுவனத்தை விட்டு வெளியேறும் பெரும்பாலான ஊழியர்கள் தற்போது அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணம் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளியேறும் 2,145 பேரில், 1,818 பேர் அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணத் துறைகளில் பணிபுரிகின்றனர். மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை அல்லது நிதி போன்ற ஆதரவுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பணிநீக்கத் திட்டம் குறித்துப் பேசிய நாசா செய்தித்தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ், " பட்ஜெட்டுக்கு மிகவும் முன்னுரிமை அளித்து செயல்படும் நிலையில், எங்கள் பணிகளையும் உறுதியுடன் தொடர நாசா ஆயத்தமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
நாசாவுக்கு குறைந்த பட்ஜெட்
2026ஆம் ஆண்டிற்கான வெள்ளை மாளிகையின் பட்ஜெட் முன்மொழிவைத் தொடர்ந்து இந்தப் பணிநீக்கத் திட்டம் பற்றிய தகவல் வருகிறது. நாசாவின் நிதி 25 சதவீதம் குறைக்கப்படும் என்றும், ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 5,000 ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கை காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்டால், 1960 களுக்குப் பிறகு மிகக் குறைந்த பட்ஜெட்டில் நாசா செயல்பட வேண்டிய நிலை ஏற்படும்.
அறிவியல் திட்டங்களும் ரத்து?
விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த பணிநீக்கம் மற்றும் பட்ஜெட் குறைப்பால் பல அறிவியல் திட்டங்களும் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளது.
புதன்கிழமை அன்று, நாசாவின் தற்காலிக நிர்வாகியாக போக்குவரத்துத் துறை செயலாளர் சீன் டஃப்பியை ட்ரம்ப் அறிவித்தார். முதலில் எலான் மஸ்க்கின் நண்பரான ஜாரெட் ஐசக்மேனுக்கு இந்தப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

