வாடிகன் சிட்டி முதல் மால்டா வரை! உலகிலேயே மிகச் சிறிய நாடு எது தெரியுமா?
Smallest countries in the world: உலகில் மிகவும் கவர்ச்சிகரமான சில இடங்கள் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகச் சிறியவை. அந்த வகையில் உலகின் 10 சிறிய நாடுகளைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொன்று நாடும் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகைக் கொண்டவை.

Vatican City
வாடிகன் நகரம் - (பரப்பளவு: 0.44 சதுர கி.மீ)
ரோமின் மையப்பகுதியில் அமைந்துள்ள வத்திக்கான் நகரம், உலகின் மிகச் சிறிய நாடு மட்டுமல்ல, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமும் கூட. செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் சிஸ்டைன் சேப்பல் போன்றவற்றுக்குத் தாயகமாக இருக்கும் இந்த சிறிய நாடு கட்டிடக்கலை பிரபலமானது.

Monaco
மொனாக்கோ - (பரப்பளவு: 1.95 சதுர கி.மீ)
பிரெஞ்சு ரிவியராவில் அமைந்துள்ள மொனாக்கோ, சிறிய அளவுடன் இருந்தாலும் கேசினோ, கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் மத்தியதரைக் கடல் கடற்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது பணக்காரர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும் ஒரு விளையாட்டு மைதானமாக அமைகிறது.
Nauru
நௌரு - (பரப்பளவு: 21 சதுர கி.மீ)
மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு, அதன் அற்புதமான வெப்பமண்டல நிலப்பரப்புகள் மற்றும் வளமான நீர்வாழ் பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற ஒரு தீவு நாடு. இது கடல் விலங்கினங்கள் மற்றும் பனை மரங்கள் நிறைந்த கடற்கரையைக் கொண்டது. பவளப்பாறைகளும் அதிகமாக உள்ளன.
Tuvalu
துவாலு - (பரப்பளவு: 26 சதுர கி.மீ)
ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் துவாலு. அழகிய கடற்கரைகள், படிகத் தெளிவான நீர் மற்றும் வண்ணமயமான கடல்வாழ் உயிரினங்களால் நிறைந்த சொர்க்கபுரி இந்த நாடு. கடல் மட்டம் உயர்வு போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டாலும், இந்த தென் பசிபிக் நாடு சுற்றுச்சூழல் சுற்றுலா ஆர்வலர்களை ஈர்க்கிறது.
San Marino
சான் மரினோ - (பரப்பளவு: 61 சதுர கி.மீ)
அப்பெனின் மலைகளைக் கொண்ட சான் மரினோ, உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகும். இது 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தாலியால் சூழப்பட்ட இந்த அழகிய நாடு, வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காகப் புகழ் பெற்றது.
Liechtenstein
லிச்சென்ஸ்டீன் - (பரப்பளவு: 160 சதுர கி.மீ)
சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள லிச்சென்ஸ்டீன், அதன் அழகிய ஆல்பைன் நிலப்பரப்புகளுக்காகப் பிரபலமானது. குறைந்த வரி விகிதங்களுக்கு பெயர் பெற்றது. சிறிய நாடாக இருந்தாலும் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் செழிப்பாக இருக்கிறது.
Marshall Islands
மார்ஷல் தீவுகள் - (பரப்பளவு: 181 சதுர கி.மீ)
பசிபிக் பெருங்கடலில் பரந்து விரிந்துள்ள மார்ஷல் தீவுகள், பனை மரங்கள் நிறைந்த கடற்கரைகள் கொண்டது. இங்குள்ள இரண்டாம் உலகப் போரின் நினைவுச்சின்னங்களும் பிரபலமானவை. பாரம்பரிய மைக்ரோனேசிய வாழ்க்கையை இங்கே காணலாம்.
Saint Kitts and Nevis
செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - (பரப்பளவு: 261 சதுர கி.மீ)
கரீபியனில் அமைந்துள்ள செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், அதன் பசுமையான மழைக்காடுகள், வெண்மணல் கடற்கரைகளுக்காகப் பெயர் பெற்ற நாடு. இந்த இரட்டை தீவு நாடு சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைக்காகவும் அறியப்படுகிறது. ஆப்பிரிக்க, பிரிட்டிஷ் மற்றும் கரீபியன் பாரம்பரியங்களை உள்ளடக்கியது.
Maldives
மாலத்தீவுகள் - (பரப்பளவு: 298 சதுர கி.மீ)
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு, 1,000க்கும் மேற்பட்ட பவளத் திட்டுகளைக் கொண்ட தீவு தேசம். நீருக்கடியில் உள்ள பங்களாக்கள், வண்ணமயமான பவளப்பாறைகள் சுற்றலாப் பயணிகளை ஈர்க்கின்றன. குறிப்பாக, ஹனிமூன் ஜோடிகள் அதிகமாக வந்து செல்லும் நாடாக மாலத்தீவு இருக்கிறது.
Malta
மால்டா - (பரப்பளவு: 316 சதுர கி.மீ)
மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள மால்டா ஒரு தீவுக்கூட்டமாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பழமையான கோயில்கள், கோட்டைகள், அரண்மனைகள், நீல நிற குகைகள் இங்கே பிரசித்தி பெற்றவை.