ஆண்களுக்கு அனுமதி இல்லாத தீவு.. பெண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?
குறிப்பிட்ட தீவு ஒன்று ஆண்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பிரத்யேக சுற்றுலாத் தலமாகும். இந்த தீவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. அது எங்கு உள்ளது, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஆண்களுக்கு அனுமதி இல்லாத இடம்
குடும்பம், நண்பர்கள், தம்பதிகள் என அனைவரும் ஒன்றாகச் சுற்றுலா செல்லும் காலம் இது. ஆனால் உலகில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றால் நம்புவீர்களா? பெண்கள் மட்டுமே நுழையக்கூடிய இந்த விசித்திரமான இடம் எது என்பதை பார்க்கலாம். இந்த தனித்துவமான சுற்றுலா தலம் பின்லாந்து ஹெல்சின்கி அருகே, பால்டிக் கடலில் அமைந்துள்ளது சூப்பர்ஷீ (SuperShe) தீவு. பெண்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த ஓய்வு மையத்தில், தினசரி வாழ்க்கையின் பரபரப்பு தொலைந்து, கடலின் அமைதியான அலை ஓசையும், பைன் மரங்களின் காற்றோசையும் அனுபவிக்க முடியும்.
பெண்கள் மட்டும் தீவு
சூப்பர்ஷீ தீவில் தங்குவது ஒரு அசாதாரண அனுபவம் ஆகும். இங்கு ஆரோக்கியத்துக்கான யோகா, கடற்கரையில் நீச்சல், காடுகளுக்குள் நடைபயணம், தீவைச் சுற்றி கயாக்கிங் போன்ற அனுபவங்கள் கிடைக்கின்றது. மேலும், ஆரோக்கியமான உணவு முறையை முன்னிறுத்தும் ‘ஃபார்ம்-டு-டேபிள்’ உணவு திட்டமும் இதன் சிறப்பம்சமாக உள்ளது. இதில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால், ஒரே நேரத்தில் அதிகமான கூட்டத்தை அனுமதிப்பதில்லை.
சூப்பர்ஷீ தீவு
ஒரே சமயத்தில் 8 பெண்கள் மட்டுமே அங்குள்ள வில்லாவில் தங்க முடியும் என கூறப்படுகிறது. உலகின் பல இடங்களில் தொழில்முனைவோர், கலைஞர்கள், தலைவர்கள் போன்றவர்கள் இங்கு வந்து மனநிம்மதி பெறுவதோடு, புதிய நட்புகளையும் உருவாக்குகின்றனர். மன ஆரோக்கியம் மற்றும் சுய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் இடமாக சூப்பர்ஷி தீவு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

