- Home
- உலகம்
- திருப்பரங்குன்றம் குடமுழுக்கு.! சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து.! பக்தர்களுக்கு குட் நியூஸ்
திருப்பரங்குன்றம் குடமுழுக்கு.! சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து.! பக்தர்களுக்கு குட் நியூஸ்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடாகக் கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குடமுழுக்கு (ஜூலை 14 ) இன்று காலை 5 மணி முதல் நடைபெற்று வருகிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய நிகழ்வாகும். குடமுழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்கான மதுரையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் வருகைக்காக இந்து சமய அறநிலையத்துறையால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயிலின் குடைவரைக் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி, துர்காதேவி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. குடமுழுக்கு சடங்கு, கோயிலின் தெய்வீகத்தன்மையை புதுப்பிக்கும் வகையில், புனித நீரால் மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்து சுவாமி சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் தங்க பல்லக்கில் எழுந்தருளி விழாவில் பங்கேற்கின்றனர்.
2 கோடியே 44 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நிறைவடைந்து ஜூலை 10ல் யாக சாலை பூஜை துவங்கியது. அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் மீது 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
முன்னதாக ஊரின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள், திருப்புகழ் முற்றோதுதல், பன்னிரு திருமுறை தமிழ் வேத பாராயணம், தவில், நாதஸ்வர இசை ஒலிபரப்பப்படுகிறது. யாகசாலை பூஜை துவங்கியவுடன் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிபரப்பப்பட்டது. .
இதனிடையே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இன்று (14.07.2025) காலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கிற்கு பின் காலை 7.30 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருக்கோயிலில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பொது தரிசனத்திலேயே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.