இந்தியர்களுக்கு வேலை கொடுக்காதீங்க! அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் தீவிர உலகமயமாக்கலைக் கைவிட வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

உலகமயமாக்கலை கைவிடுங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகிள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற சில அமெரிக்க நிறுவனங்கள் பின்பற்றும் தீவிர உலகமயமாக்கலை கைவிட வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட அயல்நாடுகளில் தொழிற்சாலைகள் கட்டுவதையும் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதன்கிழமை வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், நீண்ட காலமாக, அமெரிக்க தொழில்நுட்பத் துறை தீவிர உலகமயமாக்கலைப் பின்பற்றியதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையில்லாமல் அவநம்பிக்கை அடைந்தனர் என்றும் இது அமெரிக்கர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கூறினார்.
வரவிருக்கும் முதலீடுகள்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் "அமெரிக்காவிற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்" என்று டிரம்ப் வலியுறுத்தினார். “நீங்கள் அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றும் டிரம்ப் கூறினார்.
அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், அடுத்த சில மாதங்களில், "மெட்டா, அமேசான், கூகிள், மைக்ரோசாஃப்ட் ஆகியவை இந்த ஆண்டு டேட்டா சென்டர்கள் மற்றும் AI உள்கட்டமைப்பில் 320 பில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்கின்றன" என்றும், என்விடியா (Nvidia) அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள்
"AI உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்ற பல துறைகளில் இந்த மிகப்பெரிய முதலீடு, நல்ல சம்பளத்துடன் ஆயிரக்கணக்கான நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இப்போது அமெரிக்காவுக்குத் தேவை வேலைகள். நிறைய ப்ளூ காலர் வேலைகள் உட்பட" என்று டிரம்ப் கூறினார்.
AI ஏற்றுமதி ரத்து
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சாடிய டிரம்ப், கடந்த அரசின் நிர்வாகம் AI மீது கட்டுப்பாடுகளை விதிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் ஏற்றுமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். இதனால், அமெரிக்காவின் நண்பர்களை கூட சீனா மற்றும் பிற நாடுகளின் பக்கம் தள்ளியது எனவும் டிரம்ப் குறை கூறினார். தான் பதவியேற்றவுடன், அமெரிக்க AI ஏற்றுமதியை ரத்து செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.