- Home
- உலகம்
- Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!
Nepal Flood: கடும் பேரழிவை ஏற்படுத்திய நேபாள பெரு வெள்ளம் பனிமலை சரிந்து உடைந்ததால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டதா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன?
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோசி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 162 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் உள்பட 105 இந்தியர்கள் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் வெள்ளத்திற்கு, பனிப்பாறை சரிவும், அதனால் தற்காலிகமாக உருவான ஏரி உடைந்ததும்தான் காரணமாக இருக்கலாம் என்று நேபாளத்தின் நீர்வளம் மற்றும் வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டு போஸ்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சரிந்து விழுந்த பனிப்பாறைகள்
நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் இதுகுறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 'பிளானட் லேப்ஸ் (Planet Labs) நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், நேபாள-சீனா ரசுவாகாதி எல்லைச் சாவடியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் வடகிழக்கில், நேபாள-சீனா எல்லையில் ஒரு பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே லெண்டே ஆற்றில் குப்பைகள் கலந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது' என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.
சீன அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மிட்டேரி பாலத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதைக் காட்டுகின்றன. இந்த அடைப்பால் ஒரு தற்காலிக ஏரி உருவாகி, பின்னர் அது திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.
தண்ணீருடன் அடித்து வரப்பட்ட பாறைகள்
இதுகுறித்து நீர்வளத்துறையின் வெள்ள முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் பினோத் பரஜூலி பேசும்போது, "சீன அதிகாரிகள் அனுப்பிய படங்களைப் பார்த்தோம். வெள்ளத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் அவை. அதில் ஒரு பனிச்சரிவும் நிலச்சரிவும் தெளிவாகத் தெரிகிறது. பனிக்கட்டிகளும் குப்பைகளும் சேர்ந்து ஒரு ஏரியை உருவாக்கி, அது உடைந்துள்ளது. ஒரு அணை போலவே உருவாகியிருக்கிறது" என்றார்.
"வெறும் தண்ணீர் மட்டும் வந்திருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தண்ணீருடன் பாறைகளும் சகதியும் கலந்து வந்ததால், வெள்ளத்தின் சீற்றம் பல மடங்கு அதிகரித்துவிட்டது" என்றும் பரஜூலி விளக்கினார்.
நிலநடுக்கம் ஏற்பட்டதா?
இந்த முதற்கட்ட மதிப்பீட்டின்படி, லெண்டே ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டு அடைப்பு உண்டானது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பனிப்பாறை ஏரி உடைப்பும் (glacial lake outburst) இதனுடன் சேர்ந்து நடந்ததா என்பதை அதிகாரிகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை.
காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வாளரும் பேராசிரியருமான ரிஜன் பக்த கயஸ்தா, "நேபாளப் பக்கத்திலிருந்து ஏற்பட்ட ஒரு பனிச்சரிவு, லெண்டே ஆற்றை மறித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், திபெத்தியப் பகுதியில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கோசைன்குண்டாவிலிருந்து சுமார் 47 கிலோமீட்டர் வடக்கே, திபெத்தியப் பகுதியில் காலை 8:37 மணிக்கு ரிக்டர் அளவில் 4.4 ஆக ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதியும் போட்டேகோசி ஆற்றில் இதேபோன்ற ஒரு திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, பனிப்பாறை ஏரி உடைந்ததே வெள்ளத்திற்குக் காரணம் என நீர்வளம் மற்றும் வானிலை ஆய்வுத் துறை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையான காரணம் இனி தான் தெரியும்
தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத், "பனிச்சரிவால் ஆறு மறிக்கப்பட்டதாக எங்களுக்கும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. சீனாவில் உள்ள வட்டாரங்கள் மூலம் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையத்திற்கு (ICIMOD) இந்தத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் எங்களுடன் பகிர்ந்துள்ளார்கள். இது ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான். இப்போதைக்கு எங்கள் முழு கவனமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்தான் இருக்கிறது. வெள்ளத்திற்கான உண்மையான காரணம் படிப்படியாகத் தெரியவரும்" என்றார்.
ரசுவா பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கனமழை எதுவும் பெய்யவில்லை என நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இது, பனிச்சரிவு காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

