என்னப்பா இது? செவ்வாய் கிரகத்தில் மர்மமான ஹெல்மெட் பாறை! நாசா விஞ்ஞானிகள் வியப்பு!
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயில் ஹெல்மெட் போன்ற பாறையைப் படம்பிடித்துள்ளது. இந்தப் பாறை செவ்வாயின் சுற்றுச்சூழல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹார்ன்ஃபிளேயா என்ற இந்தப் பாறை, கோள வடிவ துகள்களால் ஆனது.

செவ்வாய் கிரகத்தில் ஹெல்மெட் வடிவ பாறை
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் ஒரு எரிமலை வடிவ பாறையின் படத்தை ஆகஸ்ட் 5, 2025 அன்று படம்பிடித்துள்ளது. இது பார்க்க ஒரு பழைய போர் ஹெல்மெட் போல காட்சியளிக்கிறது. தற்போது, இந்தப் பாறை செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பின்னணி மற்றும் செயல்பாடு
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பண்டைய உயிரினங்களின் அறிகுறிகளைத் தேடி வருகிறது. அதோடு, எதிர்காலத்தில் பூமிக்கு கொண்டு வர சாத்தியமான பாறை மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இந்த ஆய்வின்போது, ரோவர் அடிக்கடி இதுபோன்ற விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பாறைகளை படம்பிடித்து அனுப்புகிறது.
இந்தப் பாறையின் படத்தை ரோவரில் உள்ள Left Mastcam-Z எனப்படும் கேமரா ஜோடி எடுத்துள்ளது. இது ரோவரின் மாஸ்டின் உச்சியில் அமைந்துள்ளது.
பாறையின் அமைப்பு மற்றும் தோற்றம்
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தப் பாறையின் தனித்துவமான வடிவம் மற்றும் அமைப்பு வேதியியல் சிதைவு (chemical weathering), கனிமப் படிவுகள் (mineral precipitation) அல்லது எரிமலை செயல்முறைகள் (volcanic processes) ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம்.
இந்தப் பாறை, சிறிய, கோள வடிவிலான துகள்களால் (spherules) ஆனது. இந்தத் துகள்கள் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது.
ஹார்ன்ஃபிளேயா (Horneflya)
இது குறித்து நாசாவின் செய்தித் தொடர்பாளர் டேவிட் அக்லே கூறியதாவது, "இந்த தொப்பி வடிவப் பாறை, கோள வடிவிலான துகள்களால் ஆனது. இதற்கு 'ஹார்ன்ஃபிளேயா' (Horneflya) என பெயரிடப்பட்டுள்ளது. இது, காற்று அரிப்பின் காரணமாக உருவான பிரமிடு வடிவ பாறைகளுடன் ஒத்துப்போகிறது. இருப்பினும், இது முழுவதும் கோள வடிவ துகள்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
இந்த கோள வடிவ துகள்கள், நிலத்தடி நீர் படிவுகள் காரணமாகவோ அல்லது எரிமலை வெடிப்புகளின் போது உருகிய பாறைத் துளிகள் விரைவாக குளிர்ந்து உருவானதாகவோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.