- Home
- உலகம்
- அமலான 50% வரி; இந்தியாவின் நலனே முக்கியம்! ட்ரம்பின் அழைப்பை 4 முறை ஏற்க மறுத்த நரேந்திர மோடி
அமலான 50% வரி; இந்தியாவின் நலனே முக்கியம்! ட்ரம்பின் அழைப்பை 4 முறை ஏற்க மறுத்த நரேந்திர மோடி
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் ட்ரம்ப் பிரதமர் மோடியை தொடர்புகொள்ள 4 முறை முயற்சித்ததாகவும், ஆனால் அவருடன் பேச பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

ட்ரம்பின் அழைப்பை ஏற்காத மோடி
கடந்த சில நாட்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை குறைந்தது நான்கு முறை தொடர்பு கொள்ள முற்பட்டதாக பிரபல ஜெர்மன் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது; இருப்பினும், பிரதமர் அவருடன் பேசவில்லை. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதிப்பே ட்ரம்ப் மீதான மோடியின் கோபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
வரியை காட்டி மிரட்டிய ட்ரம்ப்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் ட்ரம்பின் அறிவிப்பைப் பொருட்படுத்தாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு 50% வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா மீது அதிருப்தி
இந்தியா மீதான வரி விதிப்பால் நாட்டு மக்களும், வர்த்தகர்களும் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனிடையே கடந்த சில தினங்களில் ட்ரம்ப் சுமார் 4 முறை பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர் விதித்த வரிவிதிப்பை கண்டிக்கும் வகையில் மோடி ட்ரம்பின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாக ஜெர்மன் செய்தி தாள் குறிப்பிட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானங்கள்
இந்நிலையில் புதன் கிழமை நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று மீண்டும் கூறினார். இரு நாடுகளையும் தொடர்பு கொண்ட நான் இருவரிடமும் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக போரை நிறுத்துங்கள். இல்லையென்றால் உங்களுடனான வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என்று கூறினேன் உடனடியாக போர் முடிவுக்கு வந்தது.
மேலும் போரின் போது சுமார் ரூ.1314 கோடி மதிப்பிலான இந்தியாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அதனை தடுத்து நிறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.