மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆண்மைக்குறைவு அதிகரிக்கும் அபாயம்!
மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஆண்மைக்குறைவு ஏற்படுவதில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தாக்கம் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.
Microplastics found in testicles
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டாக்ஸிகாலஜிகல் சயின்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், மனித விரைகளிலும் விந்தணுக்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் மாசுபாடு காரணமாக ஏற்படும் தாக்கங்கள் குறித்த கவலைகளை அதிகரிக்கிறது.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து திசு மாதிரிகளை ஆய்வு செய்து, அவை அனைத்திலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்தனர். நுண் பிளாஸ்டிக் துகள்களால் ஆண்மைக்குறைவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என இந்த ஆய்வு உணர்த்துகிறது.
Microplastics in human body
யூ.என்.எம். செவிலியர் கல்லூரியின் பேராசிரியரான சியாங்ஜோன் ஜான் யூ தலைமையிலான ஆய்வுக் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. 47 நாய்கள் மற்றும் 23 மனித விரைகளில் 12 வகையான மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டுபிடித்ததாக இந்த ஆய்வு கூறுகிறது.
"எங்கள் ஆய்வு அனைத்து சோதனைகளிலும் மனித விந்தணுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை வெளிப்படுத்தியது" என்று யூ கூறுகிறார். "சமீப காலமாக ஆண்களுக்கு ஏற்பட்டுவரும் ஆண்மைக்குறைவு பிரச்சினை ஏன் என்பதை யோசித்தால், இது காரணமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" எனவும் அவர் சொல்கிறார்.
Image: Getty
பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களில் பயன்படுத்தப்படும் பாலிஎத்திலின் தான் மிகவும் பரவலாகக் காணப்படும் பிளாஸ்டிக் வகை. அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது பி.வி.சி. (PVC) எனப்படும் பாலிவினைல் குளோரைடு.
"ஆரம்பத்தில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இனப்பெருக்க அமைப்பில் ஊடுருவ முடியுமா என்று நான் சந்தேகித்தேன். முதலில் நாய்களுக்கான ஆய்வு முடிவுகளைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். மனிதர்களிலும் அதேபோன்ற முடிவுகளைக் கண்டபோது இன்னும் ஆச்சரியப்பட்டேன்" எனவும் யூ தெரிவிக்கிறார்.
Impact of microplastics
"இந்த ஆராய்ச்சி மைக்ரோ பிளாஸ்டிக் நமது சுற்றுச்சூழலில் பரவி, மனித உடலின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதிகளையும் சென்றடைகிறது என்பதை உறுதி செய்கிறது. ஆண்மைக்குறைவு ஏற்படுவதில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் தாக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் தேவை" என்றும் அவர் வலியுறுத்துகிறார்.