விண்வெளியில் கழிவுகளைக் கொட்டும் ஸ்பேஸ்எக்ஸ்; மெக்சிகோ கடும் கண்டனம்
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியதால் மெக்சிகோவில் விழுந்த கழிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க மெக்சிகோ அதிபர் முடிவு செய்துள்ளார். இதனிடையே ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி கழிவுகள்
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களைக் குடியமர்த்தும் லட்சியப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவரது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) வர்த்தக விண்கல நிறுவனம் மூலம் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 403 அடி உயர ஸ்டார்ஷிப் விண்கலம் கடந்த மே மாத இறுதியில் ஏவப்பட்டது. இருப்பினும், விண்ணில் ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்குள் அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது.
கட்டுப்பாட்டை இழந்த விண்கலம்
கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பியுள்ளது. எனினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதனைப் பாதுகாப்பாக மீண்டும் கொண்டுவர முடியவில்லை. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் நோக்கில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
இந்த விண்கலம் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையருகே வெடித்து விழுந்தது. இதன் பாகங்கள் மெக்சிகோவின் தமவுலிபாஸ் (Tamaulipas) மாகாணத்திலும் விழுந்துள்ளன.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம்
இந்தச் சூழலில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum), இதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷீன்பாம், "உண்மையில் விண்வெளியில் கழிவுகள் (குப்பைகள்) சேர்ந்துள்ளன. தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன எனப் பரிசீலனை செய்யப்படும்," என்று கூறினார்.
ராக்கெட் கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு விரிவான மறுஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவினர், ராக்கெட் கழிவுகள் பற்றி அவ்வப்போது கவலை தெரிவித்து வருகின்றனர். என்றபோதிலும், அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம், ஆண்டுக்கு விண்ணில் அனுப்பும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எண்ணிக்கையை 5-ல் இருந்து 25 ஆக உயர்த்திக்கொள்ள கடந்த மே 25-ல் ஒப்புதல் அளித்தது. இந்த விரிவாக்க ஒப்புதலால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்து இருந்தது.
சமீபத்தில், கூகிள் மேப்பில், மெக்சிகோ வளைகுடா என்பதற்குப் பதிலாக அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிரம்பின் உத்தரவின்பேரில் இது நடந்தத. இதற்கு எதிராக ஷீன்பாம் அரசு வழக்கு பதிவு செய்தது. இந்தச் சூழலில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.