கூகுளுக்கு ரூ.315 கோடி அபராதம்! கமுக்கமாக எதிரிகளை காலி செய்த ஒப்பந்தம்!
ஆஸ்திரேலியாவில் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியைக் கட்டுப்படுத்தும் விதமாக கூகுள் சட்டவிரோத ஒப்பந்தம் செய்ததற்காக ரூ.315 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆரோக்கியமான போட்டியைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு
உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள், ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியைக் கட்டுப்படுத்தும் விதமாக, சட்டவிரோத ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, ஆஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு ரூ.315 கோடி (36 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள டெல்ஸ்ட்ரா மற்றும் ஆப்டஸ் ஆகிய இரு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. அதன்படி, இந்த நிறுவனங்கள் விற்கும் ஆண்ட்ராய்டு போன்களில், கூகுள் தேடுபொறி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
ஆரோக்கியமான போட்டியைத் தடுக்கும் கூகுள்
இதனால், மற்ற போட்டி தேடுபொறிகள் பயனர்களைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு ஈடாக, கூகுள் தனது விளம்பர வருவாயில் ஒரு குறிப்பிட்ட பங்கை இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியது.
இந்த ஒப்பந்தம், நுகர்வோரின் தேர்வுகளைக் கட்டுப்படுத்துவதாகவும், ஆரோக்கியமான போட்டியைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கூகுளுக்கு ரூ.315 கோடி அபராதம்
நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஆஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனம் போட்டியைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒப்பந்தம் செய்ததை உறுதி செய்தது. மேலும், இது நுகர்வோர் மற்றும் போட்டி நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, கூகுளுக்கு ரூ.315 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு, இணைய சந்தையில் ஏகபோக உரிமையை நிலைநிறுத்த முயற்சிக்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.