USA vs Ukraine: உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தம்! டொனால்ட் டிரம்ப் அதிரடி! ஜெலன்ஸ்கி ஷாக்!
உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தியதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. இது ரஷ்யா போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

USA vs Ukraine:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று (மார்ச் 03) உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்திவிட்டார். இது ரஷ்யாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டிரம்ப் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண விரும்புகிறார். டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த ஒரு பெரிய மோதலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்-ஜெலன்ஸ்கி
முன்னதாக, செய்தியாளர்கள் உக்ரைனுக்கு ராணுவ உதவி நிறுத்தப்படுமா என்று கேட்டபோது, டிரம்ப் நேரடியாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அமெரிக்க ஆயுதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்க்கும் உக்ரைனின் திறன் குறைய வாய்ப்புள்ளது. தற்போது உக்ரைனில் அனைத்து அமெரிக்க ராணுவ தளவாடங்களும் நிறுத்தப்படும் என்றும் இதில் விமானங்கள் மற்றும் கப்பல்களில் கொண்டு செல்லப்படும் ஆயுதங்கள் மற்றும் போலந்தில் காத்திருக்கும் ஆயுதங்களும் அடங்கும் எனவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, இந்த நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது. "அதிபர் டொனால்ட் டிரம்ப் சமாதானத்தில் கவனம் செலுத்துவது தெளிவாக உள்ளது. எங்கள் நட்பு நாடுகளும் அந்த இலக்கை அடைய உறுதியாக இருக்க வேண்டும்," என்று வெள்ளை மாளிகை அதிகாரி AFP இடம் பெயர் வெளியிட விரும்பாமல் கூறினார்.
"உதவி ஒரு தீர்வைக் கொண்டு வருகிறதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவியை நிறுத்தி மதிப்பாய்வு செய்கிறோம்," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். ஜெலென்ஸ்கியின் பிடிவாதமான நிலைப்பாட்டை இனி "சகித்துக் கொள்ள முடியாது" என்று டிரம்ப் திங்களன்று எச்சரித்தார். மேலும் அமெரிக்காவின் ஆதரவை ஜெலென்ஸ்கி "அதிகமாக பாராட்ட வேண்டும்" என்றும் கூறினார்.
கனடா, மெக்சிகோ மீது 25% வரி விதித்த ட்ரம்ப்.. ஆட்டம் கண்ட பங்குச் சந்தை!
அமெரிக்கா ராணுவம்
வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு உரையின்போது, மாஸ்கோவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஜெலென்ஸ்கி "வெகு காலம் இருக்க மாட்டார்" என்று டிரம்ப் கூறினார். தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ''உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிகம் செலவழித்து விட்டது. உக்ரைனுக்கு ஐரோப்பா அதிகம் பணம் செலவழிக்கவில்லை. அமெரிக்கா தான் அதிகம் செலவழித்துள்ளது.
ஐரோப்பா செலவழித்ததை விட நாங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருள் வாங்கிய செலவு அதிகம். அமெரிக்கா முன்னாள் அதிபர் (ஜோ பைடன்) முட்டாள்தனமாக உக்ரைனுக்கு 320 பில்லியன் டாலர்கள் செலவழித்து விட்டார். உக்ரைனுக்கு பணம் கொடுத்ததால் எங்களிடம் ஏதும் இல்லை'' என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இதேபோல் ஜெலென்ஸ்கியும் திங்களன்று போர் "விரைவில் முடிவுக்கு வர வேண்டும்" என்று விரும்பினார். 2014 இல் உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா, 2022 இல் மோதலை அதிகப்படுத்தியது. ரஷ்யா சமாதான பேச்சுவார்த்தைக்கு உண்மையிலேயே தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி இவ்வாறு கூறினார்.
கனடாவுக்கு டொனால்ட் டிரம்ப் மிரட்டல்! மன்னர் சார்லஸ் உதவியை நாடும் ஜஸ்டின் ட்ரூடோ!