உலகிலேயே முதலில் தங்க நகை அணிந்தவர்கள் யார் தெரியுமா? ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கல்லறைகளில் கிடைத்த நகைகள், அக்கால மக்கள் தங்கம் உருக்கும் நுட்பத்தை அறிந்திருந்ததையும், சமூகத்தில் அதிகாரப் பிரிவினைகள் இருந்ததையும் காட்டுகின்றன.

உலகின் பழைய தங்க நகைகள்
மனிதன் தங்கத்தை எப்போது முதல் நகைகளாகப் பயன்படுத்தினான் என்ற கேள்விக்கு பல ஆண்டுகள் தெளிவான பதில் இல்லை. ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வர்ணா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ புதையல் இந்த வரலாற்றையே மாற்றியது. உலகிலேயே மிகப் பழமையான தங்க நகைகள் இங்கே இருந்து கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, மனிதர்கள் பழைய ஆண்டுகளுக்கு முன்பே தங்கத்தை அலங்காரமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் பயன்படுத்தியதை வெளிப்படுத்தியது. 1972ஆம் ஆண்டு, பல்கேரியா நாட்டின் கருங்கடல் கரையோரத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தபோது தொழிலாளர்கள் சில பழமையான கல்லறைகளை கவனித்தனர்.
பழமையான தங்கப் புதையல்
இதையடுத்து தொல்பொருள் ஆய்வாளர்கள் விரிவான அகழாய்வை மேற்கொண்டனர். அப்போது நூற்றுக்கணக்கான கல்லறைகள் வெளிச்சத்துக்கு வந்தன. இவை சாதாரண அடக்க இடங்கள் அல்ல. ஒரு பழமையான சமூகத்தின் வாழ்க்கை முறையையும் நம்பிக்கைகளையும் காட்டும் வரலாற்றுச் சுவடுகள். ஆய்வுகளின் மூலம் இந்தக் கல்லறைகள் கிமு 4600 முதல் 4300 காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டது. அதாவது சுமார் 6,000 ஆண்டுகளுக்கு மேலான பழமையானவை. அந்த கால மக்கள் தங்கத்தை உருக்கி வடிவமைக்கும் நுட்பத்தை அறிந்திருந்தது ஆச்சரியமாகும். பல கல்லறைகளில் மணிகள், வளையல்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவை கிடைத்தன.
தொல்பொருள் தங்க கண்டுபிடிப்பு
குறிப்பாக ஒரு கல்லறையில் அதிக அளவு தங்க நகைகள் இருந்தது, அந்த நபர் உயர்ந்த அந்தஸ்துடையவர் என்று காட்டுகிறார். இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய உண்மையைச் சொல்கிறது. பழங்கால சமூகங்களிலும் சமத்துவம் மட்டும் இல்லை. செல்வமும் அதிகாரமும் சிலரிடம் குவிந்திருந்தன. சில கல்லறைகள் செல்வச் சின்னங்களால் நிரம்பிய, மற்றவை வெறுமையாக இருந்தன. இது சமூகப் பிரிவினைகள் அக்காலத்திலேயே இருந்ததைக் காட்டுகிறது. இன்று இந்த அபூர்வ நகைகள் வர்ண தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு, உலகம் முழுவதும் இருந்து வரும் பார்வையாளர்களை கவர்கின்றன. மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய சான்றாக கருதப்படுகிறது.

