- Home
- Business
- வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி.. வட்டி குறையுமா? பிப்ரவரி 6ல் முக்கிய முடிவு
வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி செய்தி.. வட்டி குறையுமா? பிப்ரவரி 6ல் முக்கிய முடிவு
பிப்ரவரி 6 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 0.25% குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பால் ஏற்படும் நிதி நன்மைகளை எப்படி முழுமையாகப் பெறுவது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

ஆர்பிஐ ரெப்போ வட்டி
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 6 அன்று நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நாணயக் கொள்கை கூட்டம், வங்கித் துறை, ரியல் எஸ்டேட் துறை மட்டுமல்லாமல், வீட்டுக் கடன் வைத்துள்ள பொதுமக்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், வங்கி ஆஃப் அமெரிக்கா பொருளாதார நிபுணர்கள், ரெப்போ வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என கூறியிருப்பது சந்தையில் புதியது விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த முறை வட்டி குறைப்பு நடந்தால், சுழற்சியில் இதுவே கடைசி குறைப்பு ஆக இருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
ஆர்பிஐ வட்டி குறைப்பு
ஆர்பிஐ முன் நிற்கும் முக்கிய சவால், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதையும், பொருளாதார வளர்ச்சி மந்தமடையாமல் பார்த்துக் கொள்வதையும் சமநிலையில் வைத்திருப்பதே. பொருளாதார வளர்ச்சியில் நிலவும் நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டியை 5.25 சதவீதம் குறைக்க ஆர்பிஐ முயற்சி செய்யலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். வட்டி விகிதம் குறைந்தால், நுகர்வோர் செலவுகள் மற்றும் முதலீடுகள் அதிகரித்து, வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும் என்பதே இதன் பின்னணி.
ரெப்போ வட்டி குறைப்பு
ரெப்போ வட்டி குறைப்பு நேரடியாக வீட்டுக் கடன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு 9% வட்டியில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்தவர் தற்போது மாதம் சுமார் ரூ.44,986 இஎம்ஐ செலுத்துகிறார். வட்டி 8.75% ஆக குறைந்தால், இஎம்ஐ ரூ.44,186 ஆக குறையும். மாதத்திற்கு சுமார் ரூ.800 சேமிப்பு கிடைக்கும். முழு காலத்தில் பார்த்தால், வட்டி செலவில் சுமார் ரூ.1.9 லட்சம் குறைவு ஏற்படும்.
வீட்டுக் கடன்
இங்கு இன்னொரு முக்கிய முடிவு உள்ளது. இஎம்ஐ-யை குறைப்பதா? அல்லது அதே இஎம்ஐ-யை தொடர்வதா? இஎம்ஐ-யை மாற்றாமல் தொடர்ந்தால், கடன் காலம் 10 முதல் 12 மாதங்கள் வரை குறையும். இதன் மூலம் கடன் ஒரு வருடம் முன்பே முடிவடைவதுடன், மொத்த வட்டி சேமிப்பு ரூ.4 லட்சத்துக்கும் அதிகமாகும். பெரும்பாலான வங்கிகள் வட்டி குறையும் போது இஎம்ஐ-யை மாற்றாமல், கடன் காலத்தை தானாகவே குறைக்கும். இஎம்ஐ குறைக்க வேண்டும், வங்கியை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுக்க வேண்டும்.
நாணயக் கொள்கை முடிவு
இதற்கிடையே, சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கியின் கவனம் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு திரவத்தன்மை வழங்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்கத் தயார் என சிக்னல் தரப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய பதற்றங்கள் இருந்தாலும், இந்த முறை வட்டி முடிவில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர். டிசம்பருடன் ஒப்பிடுகையில் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. பணவீக்கம் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்கும் வாய்ப்பு, தொழில் மற்றும் நுகர்வு துறைகளில் காணப்படும் நல்ல அறிகுறிகள்—இவை அனைத்தும் ஆர்பிஐ-க்கு நம்பிக்கையளிக்கின்றன. பிப்ரவரி 6 முடிவு, வட்டிக்கான அறிவிப்பை விட, வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களின் எதிர்கால நிதித் திட்டத்தையே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

