எங்களுக்கும் சண்ட போட தெரியும்; உலகப்போரில் பங்கேற்ற 5 விலங்குகள்
போர் என்றாலே இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் என்று நமக்குத் தெரியும். இரண்டு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், டாங்கிகள், விமானங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவார்கள். ஆனால் இது போன்ற சில போர்களில் எலி, நாய்கள், புறாக்கள், கடலில் வாழும் டால்பின்களும் பங்கேற்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அந்த விவரங்கள்.
சார்ஜென்ட் ரெக்லெஸ்(குதிரை)
கொரியா நாட்டில் நடந்த ஒரு போரில் இந்த சார்ஜென்ட் ரெக்லெஸ் குதிரை பங்கேற்றது. இது மங்கோலிய இனத்தைச் சேர்ந்த குதிரை. இது ஆபத்தான வெடிபொருட்களை, காயமடைந்த வீரர்களை பாதுகாப்பாக இலக்குக்கு கொண்டு சென்றது. சார்ஜென்ட் பல பதக்கங்களைப் பெற்றது.
வாய்டெக் (கரடி)
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டு வீரர்கள் வாய்டெக் என்ற கரடியை தத்தெடுத்தனர். இதை வெடிபொருட்களை சுமந்து செல்ல பயன்படுத்தினர். இதன் துணிச்சலைக் கண்டு வீரர்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்களாம்
சேர் அமி (புறா)
சேர் அமி என்ற புறாவை அமெரிக்கா முதல் உலகப் போரில் பயன்படுத்தியது. 1918 இல் பிறந்த இந்தப் புறா ஒரு வருடம் போரில் பணியாற்றியது. சுமார் 200 வீரர்களைக் காப்பாற்றியது. ஒருமுறை இது காயமடைந்த போதிலும் தகவல்களைக் கொண்டு வந்து ராணுவ அதிகாரிகளிடம் கொடுத்தது. இதன் துணிச்சலுக்கும், சாகசத்திற்கும் பாராட்டாக அமெரிக்கா துணிச்சல் பதக்கத்தையும் வழங்கியது.
சார்ஜென்ட் ஸ்டபி (நாய்)
இந்த நாய் இரண்டாம் உலகப் போரில் ஒரு ஹீரோவாக இருந்தது. அமெரிக்க ராணுவத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. குறிப்பாக எதிரி நாடுகள் நடத்திய விஷவாயுத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்க ராணுவத்தை பலமுறை காப்பாற்றியது. 1916 இல் பிறந்த இந்த நாய் இரண்டாம் உலகப் போரின் போது 18 மாதங்களில் 17 போர்களில் பங்கேற்றது. எந்த விலங்குக்கும் கிடைக்காத சார்ஜென்ட் பதவியைப் பெற்று சாதனை படைத்தது.
ராணுவ டால்பின்கள்
அமெரிக்காவின் கடற்படை சில டால்பின்களைத் தேர்ந்தெடுத்து சிறப்புப் பயிற்சி அளித்தது. ராணுவ டால்பின்களைப் பயன்படுத்தி கடலில் நீருக்கு அடியில் எதிரிப் படைகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தனர். அதேபோல் போர்க்கப்பல்களைக் காப்பாற்ற இவற்றின் மூலம் தகவல்களைச் சேகரித்தனர். டால்பின்களின் புத்திசாலித்தனம் மிகவும் பெரியது, பல சந்தர்ப்பங்களில் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்க முடிந்தது.