எக்ஸ்போஷர் முதல் எஃபெக்ட்ஸ் வரை... ஐபோன் 16 கேமரா கன்ட்ரோல் பட்டனில் இவ்ளோ இருக்கா!
ஆப்பிள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமரா கன்ட்ரோல் பல பிரத்யேகமான வசதிகளைக் கொடுக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max என நான்கு மாடல்களை அறிமுகமாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன்களில் கேமராவை விரைவாக கையாளும் வகையில், பக்கவாட்டில் கேமரா கன்ட்ரோல் பட்டன் என்ற பிரத்யேகமான பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா கன்ட்ரோல் பட்டன் பல்வேறு கேமரா பயன்பாடுகளை ஆதரிக்கிறது. துல்லியமான அழகான காட்சிகளை கிளிக் செய்ய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் இந்த வசதிகள் புதிய ஐபோன்களில் உடனடியாகக் கிடைக்காது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கேமரா கன்ட்ரோல் பட்டனின் வசதிகள் முழுமையாக பயனர்களுக்குக் கிடைக்கும் என்று ஆப்பிள் உறுதியளிக்கிறது.
iPhone 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து மாடல்களும் இந்த புதிய கேமரா கன்ட்ரோல் பட்டனுடன் வந்துள்ளன. இந்த பட்டன் சில போன்களில் பக்கவாட்டில் இருக்கும் கைரேகை சென்சார் போலத் தெரிகிறது. ஆனால், இந்த பட்டன் மொபைலின் கீழ் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. மொபைலை கிடைமட்டமாக வைத்து போர்ட்ரெய்ட் (portrait) படங்களை எடுப்பதற்கு இந்த பட்டன் உதவியாக இருக்கும். கட்டைவிரல் எளிமையாக அந்த பட்டனை எட்டும் வகையில் இருப்பதால் ஈசியாக கிளிக் செய்ய முடியும்.
கேமரா கன்ட்ரோல் பட்டன் மூலம் கேமரா செயலியை விரைவாகத் ஓபன் செய்து புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கலாம். கேமராவில் எக்ஸ்போஷர், ஃபீல்டு டெப்த் போன்றவற்றைச் சரிசெய்ய இந்த பட்டன் மீது விரல்களை ஸ்லைடு செய்தால் போதும். மேலும் இந்த பட்டன் மூலமகாவே கேமராவின் லென்ஸ்களுக்கு மாறலாம். ஷாட்டை வடிவமைக்க டிஜிட்டல் ஜூமைப் பயன்படுத்தலாம். பட்டனில் இருமுறை லேசாக அழுத்தினால், எக்ஸ்போஷர், ஃபீல்டு டெப்த் போன்ற பல்வேறு அம்சங்கள் திரையில் தோன்றும்.
ஆப்பிளின் சமீபத்திய கேமரா கன்ட்ரோல் பட்டன் ஃபோர்ஸ் சென்சாருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பட்டனில் லேசான அழுத்தத்தை தனியே அறியும் திறனைக் கொடுக்கிறது. இத்துடன் கேப்டிவ் சென்சாரும் உள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன் 16 கேமராவுக்கு புதிய அப்டேட்கள் கிடைக்கும். அதில் Two stage shutter அம்சம் கிடைக்கும். இதன் மூலம் பயனர்கள் பட்டனை லைட் பிரஸ் செய்து படம் எடுக்க உள்ள சப்ஜெக்ட் மீது ஃபோக்கஸ் மற்றும் எக்ஸ்போஷரை லாக் செய்யலாம். இந்த அம்சங்களை டெவலப்பர்கள் கினோ மற்றும் ஸ்னாப்சாட் போன்ற மற்ற செயலிகளிலும் கொண்டுவர முடியும்.
பொருள்கள் மற்றும் இடங்களை அடையாளம் காண, கேமரா கன்ட்ரோல் பட்டனுடன் ஆப்பிள் நுண்ணறிவுடன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம். இது பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் படம் பிடிக்கவும், அதைப் பற்றிய விவரங்களைப் பெறவும் உதவுகிறது. உதாரணமாக, பயனர்கள் தாங்கள் கடந்து செல்லும் ஒரு உணவகத்தின் ரேட்டிங், செயல்படும் நேரம் போன்ற தகவல்களைப் பார்க்க, அந்த ஹோட்டலை நோக்கி கேமராவை வைத்து கன்ட்ரோல் பட்டனை ஒரு கிளிக் செய்தால் போதும்.
ஒரு நிகழ்வை காலண்டரில் சேர்க்க, ஒரு பூவை அடையாளம் காண என பலவற்றுக்கு இந்த வசதியை பயன்படுத்தப்படலாம். ஆனால், இந்த வசதிபகள் எல்லாம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன் 16 மாடல்களுக்குக் வரும் அப்டேட் மூலம்தான் பயன்பாட்டுக்கு வரும்.