- Home
- Tamil Nadu News
- ஒரு வாய்ப்பு கிடைத்தால்... முழு மூச்சோடு போராடுவேன்: நீதிபதி சுதர்சன் ரெட்டி வாக்குறுதி
ஒரு வாய்ப்பு கிடைத்தால்... முழு மூச்சோடு போராடுவேன்: நீதிபதி சுதர்சன் ரெட்டி வாக்குறுதி
வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டினார். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாக உறுதியளித்த சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி தேர்தல் 2025
வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி, இன்று சென்னைக்கு வந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டினார்.
சென்னையில் நீதிபதி சுதர்சன் ரெட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இரு கூட்டணியின் வேட்பாளர்களும் தீவிரமாக ஆதரவு தேடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சுதர்சன் ரெட்டி சென்னைக்கு வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
"முழு மூச்சுடன் போராடுவேன்"
இந்த சந்திப்பின் போது சுதர்சன் ரெட்டி பேசுகையில், "தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளுக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மாநில உரிமைகளுக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.
நான் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். இப்போது நீங்கள் எனக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். எனக்கு துணை ஜனாதிபதி பதவிக்கு வாய்ப்பு அளித்தால், அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக நான் முழு மூச்சுடன் போராடுவேன்" என்று குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆதரவு
இதைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "அரசியலமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு அவர் தகுதியான வேட்பாளர். தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் சுதர்சன் ரெட்டி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை பேரும் சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள். நமது அரசமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கியுள்ளது. மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும். 'தமிழர்' என்ற முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கேட்கிறது" என்று கூறினார்.
இந்த சந்திப்பு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடம் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவை திரட்டுவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியின் ஆதரவு சுதர்சன் ரெட்டிக்கு உறுதியானது இந்த நிகழ்வில் தெளிவாகத் தெரிந்தது.

