- Home
- Tamil Nadu News
- Udhayanidhi Release: 10 மணி நேர பரபரப்புக்கு பின் உதயநிதி விடுதலை.. காவல் நிலையத்தில் பரபரப்பு நிமிடங்கள்
Udhayanidhi Release: 10 மணி நேர பரபரப்புக்கு பின் உதயநிதி விடுதலை.. காவல் நிலையத்தில் பரபரப்பு நிமிடங்கள்
Udhayanidhi Release: தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

உதயநிதி ஸ்டாலின் விடுதலை
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பேச்சு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிரணித் தலைவர் பைரவி அளித்த புகாரின் அடிப்படையில், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உதயநிதி கைது
இதையடுத்து, தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸார், டிஎஸ்பி அழகேசன் தலைமையில் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்திற்குச் சென்று அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டபோது, "இந்த நடவடிக்கையை நான் காமெடியாகப் பார்க்கிறேன்" என்று சிரித்தபடி உதயநிதி கூறினார்.
தஞ்சையில் திரண்ட திமுக தொண்டர்கள்
இதற்கிடையில், தஞ்சையில் பெருமளவில் திமுக தொண்டர்கள் திரண்டனர். பிறகு உதயநிதியை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் ஆஜர்
அங்கு, "எங்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதோ அதே காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறி ஆரம்பத்தில் காவல் வாகனத்திலிருந்து இறங்க உதயநிதி மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் காவல் நிலையத்திற்குள் சென்று விசாரணைக்கு ஆஜரானார்.
செங்கிப்பட்டி காவல் நிலையம்
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை முடிந்தவுடன் உதயநிதியை அதே நாளில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி, சுமார் 10 மணி நேர விசாரணைக்குப் பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர்.
உதயநிதி விடுவிப்பு
உதயநிதி விடுவிக்கப்பட்ட தகவல் வெளியானதும், செங்கிப்பட்டி காவல் நிலையம் முன்பு ஏற்கனவே திரண்டிருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

