500 ரூபாய் கட்டணத்தில் நவதிருப்பதிகளுக்கு டூர்.! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தமிழக அரசு, அறநிலையத்துறை மூலம் பல்வேறு கோயில் திருப்பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆன்மிக சுற்றுலாவை ஊக்குக்கிடும் வகையில், மூத்த குடிமக்களுக்கான அம்மன் கோயில் சுற்றுலா, காஞ்சிபுரம் கோயில் சுற்றுலா மற்றும் நவ திருப்பதி தரிசனம் போன்ற சிறப்பு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறநிலையத்துறை திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறநிலையத்துறை சார்பாக கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்து 355 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவுற்றுத் திருக்குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளது. மேலும் 8 ஆயிரத்து 436 திருக்கோயில்களில் 18 ஆயிரத்து 841 திருப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 776 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு 5,775 திருப்பணிகள் முடிக்கப் பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் கிராமப்புற கோயில்கள் திருப்பணிகள், கோயிலின் குளங்கள் சீரமைப்பு, ராஜகோபுரங்கள் புனரமைப்பு, கோயில்களில் அன்னதானம், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, கோவில் சார்பாக திருமண மண்டபங்கள், கோயிலில் தானமாக வந்த நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்படுவது,கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம், அர்ச்சகளுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆன்மிக சுற்றுலா
இது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக அறநிலையத்துறை சார்பாக ஆடி மாதத்தில் அம்மன் கோயில் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களை இலவசமாக அழைத்து செல்லப்பட்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய அம்மன் கோயிலில் சிறப்பு வழிப்பாட்டில் கலந்து கொள்ள வைக்கப்பட்டது. இதனையடுத்து புரட்டாசி மாத சுற்றுலாவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. 21.09.2024, 28.09.2024, 05.10.2024, 12.10.2024 இதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
kanchipuram
காஞ்சிபுரத்தில் ஒரு நாள் சுற்றுலா
இதே போல காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியது. இதன் படி காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளது. இதற்காக 650 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ரூ.325 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ திருப்பதி அன்மிக சுற்றுலா
தமிழகத்தில் போக்குவரத்து துறையை பொறுத்தவரை பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்தை இயக்கி வருகிறது. பொதுமக்களின் முன்பதிவை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போது நவ திருப்பதிகளுக்கு செல்ல போக்குவரத்து துறை புதிய ஆன்மிக சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாள் கோயிலுக்கு நவ திருப்பதி சுற்றுலாவிற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் பெருமாள் கோயில் பல கோயில்களை சுற்றிப்பார்பது மட்டுமல்ல சிறப்பு சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
tiruvannamalai
நவ திருப்பதிக்கு 500 ரூபாய் கட்டணம்
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், இரட்டை திருப்பதி, பெருங்குளம், ஆழ்வார் திருநகரி, தென் திருப்பேரை, நத்தம், திருப்பூளியங்குடி, திருக்கோளூர் ஆகிய பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி 28ஆம் தேதி மற்றும் அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய நான்கு தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவ திருப்பதி சுற்றுலாவிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலம் ஏற்பாடுகளை செய்துள்ளது. நவ திருப்பதிக்கு இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடங்கியது முன்பதிவு
பல இடங்களில் உள்ள கோயில்களில் தரிசனத்தை முடித்துவிட்டு இரவில் மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் வந்து பக்தர்கள் இறக்கி விடப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நபருக்கு கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நவ திருப்பதி ஆன்மிக சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள www.tnstc.inஎன்ற இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதே போல நெல்லை புதிய பேருந்து நிலையம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணத் தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.