ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திக்கத் திட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு நாள் பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நான்கு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின்போது அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒருநாள் பயணமாக டெல்லி சென்று வந்த ஆளுநர் ரவி, தற்போது மீண்டும் டெல்லிக்குச் சென்றுள்ளார்.
அமித் ஷாவுடன் சந்திப்பு
இன்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்த நான்கு நாள் பயணத்தில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எடுத்துரைப்பார் எனத் தெரிகிறது.
திருப்புவனம் அஜித் குமார் வழக்கு
ஆளுநர் ஆர்.என். ரவி வரும் 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் இருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்புவனம் அஜித் குமார் வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.