- Home
- Tamil Nadu News
- வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை தோற்கடித்த தவெக வேட்பாளர்... இது எங்க?
வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை தோற்கடித்த தவெக வேட்பாளர்... இது எங்க?
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதில் ஒரு ருசீகர சம்பவம் அரங்கேறி உள்ளது. திமுக அமைச்சர் ஒருவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோற்றுள்ளார்.

TN Election Results
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் தவெக 10 சீட் வாங்குவதே கேள்விக்குறி தான் என்று பேசினார்கள். கருத்துக் கணிப்புகளும் அதையே சுட்டிக்காட்டின. ஆனால் மே 4-ந் தேதி எலெக்ஷன் ரிசல்ட் அத்தனை கணிப்புகளையும் தவிடுபொடியாக்கியது. தவெக 107 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி தமிழகத்தில் ஆட்சியமைக்க தயாராகி வருகிறது. களம் கண்ட முதல் தேர்தலிலேயே 34.95 சதவீத வாக்குகளை பெற்று தவெக மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த தேர்தலில் பல ருசீகர சம்பவங்களும் நடந்துள்ளன. அதில் ஒன்று தான் தவெக வேட்பாளர் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதைப்பற்றி பார்க்கலாம்.
ஒரு ஓட்டில் தோற்றுப்போன அமைச்சர்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை வெறும் ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடி உள்ளார். மொத்தம் 30 சுற்றுகளாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கடைசி சுற்றுவரை இழுபறி நீடித்த நிலையில், இறுதிச்சுற்றில் வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ ஆகி உள்ளார் தவெக-வின் சீனிவாச சேதுபதி. திருப்பத்தூர் திமுக கோட்டையாக இருந்து வந்தது. அங்கு திமுக 8 முறை வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2006 முதல் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றிபெற்று வந்த பெரிய கருப்பனை இம்முறை தோற்கடித்துள்ளார் தவெக வேட்பாளர்.
வரலாறு படைத்த விஜய்
தனது முதல் தேர்தலிலேயே வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறார். திருச்சி (கிழக்கு) தொகுதியிலும் அவர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இது மாநிலம் முழுவதும் அவரது கட்சிக்கு கிடைத்திருக்கும் பிளாக்பஸ்டர் வெற்றியை காட்டுகிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 107 இடங்களில் தவெக வெற்றி பெற்று உள்ளது. இது மாநில அரசியலில் ஒரு பெரிய மாற்றத்துக்கான அறிகுறியாகும். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்றாலும், இரு திராவிட கூட்டணிகளில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தவெக சாதனை
திமுக-வுக்கு பெரும் பின்னடைவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கோட்டையான கொளத்தூர் தொகுதியில் தவெக-வின் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்திருக்கிறார். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகர்களால் அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பரவலான கருத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் உடைத்தெறிந்துள்ளன. என்.டி. ராமராவ், எம்.ஜி. ராமச்சந்திரன், மற்றும் ஜெ. ஜெயலலிதா போன்ற புகழ்பெற்ற நட்சத்திர தலைவர்கள் வரிசையில் விஜய்யும் இப்போது இணைந்துள்ளார்.
விஜய்யின் சினிமா புகழ், மக்கள் மத்தியில் ஒரு ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பாக மாறியிருக்கிறது என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது. ஜூன் 1977-க்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதிக்கத்தைத் தாண்டி, தமிழகம் தனது முதல் அரசைப் பார்க்கக்கூடும் என்பதால், தவெக-வின் இந்த வெற்றி ஒரு வரலாற்று மாற்றத்தைக் குறிக்கிறது.

