- Home
- Tamil Nadu News
- Tomato Price : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! அள்ளி சென்ற பொதுமக்கள்- சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
Tomato Price : மீண்டும் குறைந்த தக்காளி விலை.! அள்ளி சென்ற பொதுமக்கள்- சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை என்ன.?
தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 ரூபாயை தொட்ட நிலையில், தற்போது படிப்படியாக தக்காளி விலை குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
தக்காளி விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை தொட்டு வந்தது. ஏழை எளிய மக்கள் வாங்க முடியாமல் திணறும் அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்களை விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் தக்காளிக்கு உற்பத்தி செய்வதை தவிர்த்து விட்டு மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியது தான் தக்காளி வரத்து குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் அதிகமான வெப்பம், உரிய காலம் இல்லாமல் தவறி பெய்த மழை உள்ளிட்டவைகள் தான் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.
நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை
தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து 200ரூபாயை தொட்டது. இதனால் வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சார்ந்த உணவுகளை தயாரிப்பதை தவிர்த்தனர்.
பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து தக்காளி விலை சந்தையில் படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து நியாய விலைக்கடைகளில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் உள்ள மக்கள் பயன் அடைந்தனர்.
மீண்டும் குறைந்த தக்காளி விலை
இந்தநிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 1100 டன் தக்காளி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக 300 முதல் 400 டன் தக்காளியே வந்தது. தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்ததால் மீண்டும் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 700 டன் தக்காளி வந்ததையடுத்து ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிலோவிற்கு ரூ 10 குறைவு
இன்றும் கூடுதல் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்ததால் தக்காளி ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையில் தெரு தெருவாக மொத்தமாக தக்காளி விற்பனை செய்யும் வண்டிகளில் ஒரு கிலோ தக்காளி 30 முதல் 40 வரை விற்பனையாகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக எண்ணிக்கையில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது கிலோ கணக்கில் வாங்கி சென்றனர்.
இதையும் படியுங்கள்
Power Shutdown in Chennai: சென்னையில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் கரண்ட் இருக்காது தெரியுமா?