- Home
- Tamil Nadu News
- ஓசிக்கு மட்டன் தர மாட்டியா.! சுடுகாட்டில் இருந்து பிணத்தை தோண்டி கடை வாசலில் போட்ட நபர்! அலறி ஓடிய மக்கள்
ஓசிக்கு மட்டன் தர மாட்டியா.! சுடுகாட்டில் இருந்து பிணத்தை தோண்டி கடை வாசலில் போட்ட நபர்! அலறி ஓடிய மக்கள்
தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசிக்கு மட்டன் தர மாட்டியா.! சுடுகாட்டில் இருந்து பிணத்தை தோண்டி கடை வாசலில் போட்ட நபர்!
ஊருக்கு ஊர் பல்வேறு விசித்திர சம்பவங்கள் அரங்கேறி வரும். ஓசிக்கு டீ தராத கடையை அடித்து உடைப்பது, இரவு நேரத்தில் தீ வைப்பது, கடையை தரக்குறைவாக விமர்சித்து போஸ்டர் ஒட்டும் சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். தற்போது அதை விட அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த வகையில், தேனி அருகே இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மணியரசன். இவர் சங்கீதா மட்டன் ஸ்டால் என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
ஓசிக்கு மட்டன்
இதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவர் எந்த வேலையும் செய்யாமல், கடைக்காரர்களை மிரட்டி பணம் வாங்குவது, கடையில் இருந்து பொருட்களை எடுத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மணியரசன் நடத்தும் மட்டன் ஸ்டாலுக்கு வந்த குமார், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணியரசன் பணம் தரமுடியாது என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தராவிட்டால் மலத்தை கரைத்து கடையில் ஊற்றுவேன், பிணத்தை எடுத்து வந்து கடை முன் போடுவேன் என மிரட்டி உள்ளார் குமார்.
சடலத்தை கடை வாசலில் போட்ட நபர்
இதனால் பயந்த மணியரசன் ஒரு கிலோ ஆட்டின் குடலை குமாருக்கு கொடுத்துள்ளார்.மட்டன் மற்றும் பணம் கேட்டால் குடல் தருகிறாயா? என ஆத்திரமடைந்த குமார் குடலை கடை முன் வீசி எரிந்து விட்டு வேகமாக சென்றுவிட்டார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பழனிசெட்டிபட்டி சுடுகாட்டிற்கு சென்ற குமார் அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி தலையில் சுமந்தபடி தெருக்கள் வழியாக நடந்து வந்து மணியரசன் மற்றும் கடை முன்பாக அந்த சடலத்தை வீசி எறிந்தார். அப்போது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறி வாங்க மக்கள் கூட்டம் அதிகளவு வந்த நிலையில் சடலத்தை பார்த்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
கைது செய்த போலீஸ்
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சடலத்தை மீட்டு மீண்டும் சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்தனர்.குமாரை கைது செய்த போலீசார் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலவசமாக மட்டன் மற்றும் பணம் தர மறுத்ததால் சுடுகாட்டில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்து வந்து மட்டன் கடை முன் வீசிய சம்பவம் பழனிச்சட்டிபட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.