குடிமகன்களுக்கு ஷாக்.! வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

நவீன காலத்தில் மது குடிப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தின்ந்தோறும் பார்ட்டிகள், கொண்டாட்டங்களில் மது விருந்து கட்டாயமாக உள்ளது. எனவே ஆண்களுக்கு இணையாக பெண்களின் கைகளிலும் மது கோப்பைகள் சர்வ சாதாரணமாக காணப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தில் மது பானத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் கோடி மது விற்பனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத் தீர்வுதுறையின் கீழ் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
தினந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறுகிறது. இதுவே பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என்றால் கோடிக்கணக்கில் பணம் குவியும். அந்த வகையில் பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் கடைகள் உள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பண்டிகை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு எப்போதும் விடுமுறை இல்லை. விடுமுறை நாட்களில் தான் பணம் கொட்டோ கொட்டு என கொட்டும். அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு வருடத்தில் 9 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்படும். மேலும் மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள் ஆகிய நாட்களில் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் சட்டம் ஒழுங்கு ஏற்படும் நாட்கள், குரு பூஜைக்கள், தேர்தல் காலங்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில் குடிமகன்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வருகிற வியாழக்கிழமை அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில், 02.10.2025 (வியாழக் கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது - மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
02.10.2025 (வியாழக் கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 251l(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள்
அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 02.10.2025 (வியாழக் கிழமை) அன்று காந்தி ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.