- Home
- Tamil Nadu News
- TN Rain: அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்! தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்?
TN Rain: அப்பாடா! வெயிலுக்கு ரெஸ்ட்! தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்?
TN Rain: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? என விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் மழைக்கு ஏங்கிய மக்கள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் கேரளாவில் பருவமழை காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, நெல்லை, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரளவு பரவலாக மழை பெய்யும். ஆனால் எல் நினோ தாக்கம் காரணமாக இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது. இதனால் மழை பெய்யாதா? என மக்கள் ஏங்கித்தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
3 மாவட்டங்களில் கனமழை
அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்று ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை?
30 ஆம் தேதியான நாளை நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை
அக்டோபர் 1 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 2 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

