- Home
- Tamil Nadu News
- CM Vijay: முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்
CM Vijay: முதல்முறையாக டெல்லிக்கு விசிட் அடிக்கும் முதல்வர் விஜய்! பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்
CM Vijay Delhi Visit : புதிய முதல்வராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய், இந்த மாத இறுதியில் முதல்முறையாக டெல்லிக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழக திட்டங்கள் குறித்து பேச உள்ளார்.

CM Vijay Meet PM Modi
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற சி. ஜோசப் விஜய், இந்த மாத இறுதியில் முதல்முறையாக டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இது அவருடைய முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இருக்கும். மூன்று நாட்கள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயணத்தின்போது, முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், மற்றும் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டெல்லி பயணம் ஏன்?
பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம், தமிழ்நாட்டின் தேவைகள் அடங்கிய கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் கொடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 10 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்.
விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டதால், TVK கட்சிக்கு தற்போது சட்டமன்றத்தில் 107 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் (ஐந்து இடங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தலா இரண்டு இடங்கள்) ஆகியவற்றின் ஆதரவுடன், கூட்டணியின் பலம் தற்போது 120 ஆக உள்ளது. இந்த பெரும்பான்மையுடன் தான் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
விஜய் கடிதம்
டெல்லி பயணத்திற்கு முன்னதாக, முதல்வர் விஜய், செவ்வாய்க்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க உடனடியாக தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை மே 12 அன்று இலங்கை கடற்படை கைது செய்ததை விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். மே 10 அன்று மீன்பிடிக்கச் சென்ற அவர்களை, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி, படகுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட், மற்றும் சகாய செல்வஷானு என முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்களுக்காக குரல் கொடுத்த விஜய்
"ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மே 12ந் தேதி கைது செய்துள்ளதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த மீனவர்கள் மே 10ந் தேதி அன்று மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி, அவர்களின் மீன்பிடிப் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் திருவாளர்கள். அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வஷானு ஆவர்," என்று விஜய் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். தற்போது 54 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதாகவும், 264 மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

