- Home
- Tamil Nadu News
- CM Vijay : என்ன உங்க அப்பாவையே காணோம்... கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதல்வர் விஜய்..!
CM Vijay : என்ன உங்க அப்பாவையே காணோம்... கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதல்வர் விஜய்..!
CM Vijay Speech : தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய், கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு என பேசியதால் சலசலப்பு நிலவியது. திமுகவினர் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தனர்.

CM Vijay Speech
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், செவ்வாயன்று சட்டசபையில் தனது அரசு 'சாமானிய குடிமகனின்' அரசு என்று குறிப்பிட்டார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலனுக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "2026 தேர்தலில், நாங்கள் மதம் மற்றும் சாதித் தடைகளை உடைத்தெறிந்தோம்," என்று அவர் கூறினார்.
சட்டசபையில் அவர் மேலும் பேசுகையில், "நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி மக்களுக்கு என் நன்றிகள்," என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், "நான் நேரடியாக சினிமா ஷூட்டிங் செட்டில் இருந்து முதலமைச்சர் ஆகிவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். அவர்களுடைய பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால், அது வெறும் 'ரீல்' தான். நாங்கள் ரசிகர் மன்றமாக செயல்பட்டபோதே, மக்களுடன் துணை நின்றோம்," என்று பதிலடி கொடுத்தார்.
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்
விமர்சனங்களைப் புறந்தள்ளிய அவர், தனது கட்சியின் அடித்தளம் பல ஆண்டு கால மக்கள் பணியால் கட்டப்பட்டது என்பதை விளக்கினார். "2008-ல், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடத்தினோம். 2009-ல், எங்கள் மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்தோம். எங்கள் திரைப்படங்கள் மூலம் சமூக நீதி மற்றும் ஊழலுக்கு எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்தோம். 2011-ல், மீனவர்களுக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டம் நடத்தி, அவர்களுக்காகக் குரல் கொடுத்தோம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை வழங்கினோம்," என்றார்.
அவர் மேலும், "ஸ்டெர்லைட் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தோம். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கினோம். இவ்வளவு செய்த பிறகுதான், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் அறிக்கைகள் வெளியிட்டோம்," என்றார்.
தமிழக வெற்றிக் கழகம், சமூக சீர்திருத்தவாதிகளின் கொள்கைகள் மற்றும் தெளிவான அரசியல் பார்வையுடன் செயல்படுவதாக விஜய் குறிப்பிட்டார்.
தனி அரசியல் சக்தி
"பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் ஏற்கவில்லை, ஆனால் அவரது பரந்த கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டோம். யாருடைய சித்தாந்தத்திற்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை எப்போதும் தெளிவுபடுத்தியுள்ளோம். டாக்டர் அம்பேத்கரின் சம வாய்ப்பு மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். காமராஜரின் நேர்மையான நிர்வாகத்தை எங்கள் வழிகாட்டியாகக் கொண்டோம். எங்கள் அரசியல் எதிரிகள் யார், சித்தாந்த எதிரிகள் யார் என்பதை நாங்கள் தெளிவாக அடையாளம் கண்டுகொண்டோம்," என்றார்.
தனது வியூகத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், "பெரும்பாலானோர் முதலில் கட்சியைத் தொடங்கிவிட்டுப் பிறகு மக்களிடம் செல்வார்கள். நாங்களோ, முதலில் மக்களிடம் சென்றுவிட்டுத்தான் கட்சியையே தொடங்கினோம். இதை புரிந்து கொள்ளாதவர்கள்தான், எங்களை வெறும் நடிகர் கட்சி என்று நிராகரிக்கிறார்கள். 2026 தேர்தலில், நாங்கள் எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டோம். மக்கள் எங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால், 35% வாக்குகளைப் பெற்றோம். 1.72 கோடி வாக்குகளைப் பெற்று, ஒரு பெரிய தனி அரசியல் சக்தியாக உருவெடுத்தோம். அதனால்தான் இப்போது நாங்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். இரண்டே கால் வருடத்தில் இதை சாதித்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்த பயணத்தில் நாங்கள் சந்தித்த சவால்களும், சிரமங்களும் அனைவருக்கும் தெரியும்," என்றார்.
முதல்வர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
அதோடு ஒரு குட்டிக் கதை ஒன்றை சொல்லிய முதல்வர் விஜய், ஒரு ஊர்ல ஒரு பெரியவர் வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குனு கண்ணுல கையை வச்சிட்டு தேடிட்டு இருந்தாராம். அப்போது ஒரு சின்னப் பையன் என்ன தேடுறீங்க என கேட்டிருக்கிறான். அதற்கு அவர் ஒன்னுமில்ல தம்பி, உங்க அப்பா இங்க இருப்பாருனு சொன்னாங்க, அதான் தேடிக்கிட்டு இருக்கேன் எங்க உங்க அப்பாவையே காணோம் என கூறி, எங்களுக்கும் இதுமாதிரி நக்கல் நையாண்டியா சம்பந்தம் சம்பந்தமே இல்லாம பேசத் தெரியும் என கூறினார்.
5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடுச்சு, இப்போ பேசு பேசுனு சொன்னா நான் என்ன பண்றது என விஜய் கேட்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
மேலும், தனது அரசு சாமானிய குடிமகனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், தனது வெற்றி மக்கள் சேவையின் மூலம் கடினமாகப் பெறப்பட்டது என்றும் விஜய் கூறினார். அவர் விளக்குகையில், "கரூரில் 41 பேர் உயிரிழந்தனர், அந்தப் பழி எங்கள் மீது போடப்பட்டது. இப்படித்தான் அரசியல் செய்ய வேண்டுமா? அண்ணா காலத்தில் சாமானிய மக்கள் அரசு இருந்தது போலவும், எம்.ஜி.ஆர் காலத்தில் மிகச் சாமானிய மக்கள் அரசு இருந்தது போலவும், இந்த விஜய் தலைமையிலான அரசு, மிக மிகச் சாமானிய மக்களுக்கான அரசு," என்று கூறி தனது உரையை முடித்தார்.

