- Home
- Tamil Nadu News
- சீச்சீ... கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஸ்டாலின் ஆட்சி... விசிக ரவுடிகள் அட்டகாசம்... அண்ணாமலை காட்டம்
சீச்சீ... கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஸ்டாலின் ஆட்சி... விசிக ரவுடிகள் அட்டகாசம்... அண்ணாமலை காட்டம்
விசிகவினரின் தாக்குதலுக்கு உள்ளான ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்ததற்காக, திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாநிதி ஆட்சியை விட மோசமான ஆட்சியை ஸ்டாலின் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாநிதி ஆட்சியைவிட மோசம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை விட, அவரது மகன் மு.க. ஸ்டாலின் மோசமான ஆட்சியை நடத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலை இந்த விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஏர்போர்ட் மூர்த்தி - விசிக தொண்டர்கள் மோதல்
சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை எதிர்கொண்ட ஏர்போர்ட் மூர்த்தியும் அவர்களைத் திருப்பித் தாக்கினார்.
இதையடுத்து, ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், ஏர்போர்ட் மூர்த்தி ஆயுதத்தைக் கொண்டு விசிகவினரைத் தாக்கியதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்ணாமலை கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், "புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரௌடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரௌடிகளை விட்டுவிட்டு, தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.