- Home
- Tamil Nadu News
- ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
ரயில் ஸ்லீப்பர் கோச்களிலும் இனி பெட்ஷீட், தலையணை..! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு! பயணிகள் குஷி!
ஜனவரி 1ம் தேதி முதல் ரயில்களில் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் கட்டண அடிப்படையில் பெட்ஷீட், தலையணை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ரயில் போக்குவரத்து
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயிலில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
ஏசி பெட்டிகளில் பெட்ஷீட், தலையணை
ரயில்களில் முன்பதில்லாத பெட்டிகள், ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகள் உள்ளன. இதில் ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு மற்றும் ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வையும், தலையணையும் வழங்கப்படுகின்றன. இதேபோல் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்கும் ( sleeper class) பெட்ஷீட், தலையணை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இனி ஸ்லீப்பர் பெட்டிகளிலும் பெட்ஷீட், தலையணை
இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளிலும் ( sleeper class) கட்டண அடிப்படையில் பெட்ஷீட் (Bed Sheets), தலையணை (Pillows) வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதாவது தலையணை, தலையணை கவர் மற்றும் பெட்ஷீட் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். போர்வை மட்டும் வேண்டும் என்றால் ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். தலையணை, பெட்ஷீட் விருப்பப்படும் பயணிகள் கட்டணம் செலுத்தி இவற்றை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக 10 ரயில்கள்
ஜனவரி 1ம் தேதி முதல் முதற்கட்டமாக ரயில்களில் தலையணை, பெட்ஷீட் வழங்கும் வசதி கொண்டு வரப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற ரயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
அதாவது சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை-சென்ட்ரல் மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-மன்னார்குடி, சென்னை-திருச்செந்தூர், சென்னை-பாலக்காடு, சென்னை-செங்கோட்டை (சிலம்பு எக்ஸ்பிரஸ்), தாம்பரம்-நாகர்கோவில், சென்னை-திருவனந்தபுரம், சென்னை எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் தலையணை, பெட்ஷீட் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் குஷியடைந்துள்ளனர்.

