- Home
- Tamil Nadu News
- SIR Impact TN Election: எஸ்.ஐ.ஆர்-ல் மாறியதா தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்? அதிக வாக்காளர் நீக்கம் நடந்த இடங்களில் த.வெ.க வென்றது எப்படி? பகீர் பின்னணி!
SIR Impact TN Election: எஸ்.ஐ.ஆர்-ல் மாறியதா தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்? அதிக வாக்காளர் நீக்கம் நடந்த இடங்களில் த.வெ.க வென்றது எப்படி? பகீர் பின்னணி!
‘பிசினஸ்லைன்’ வெளியிட்டுள்ள தேர்தல் தரவு ஆய்வின்படி, குறைந்த வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் த.வெ.க பின்னடைவைச் சந்தித்தாலும், 30,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வாக்காளர் நீக்கத்தால் த.வெ.க வெற்றி பெற்றதா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி தேசிய அளவிலும், மாநில அளவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதே தனது கட்சியின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்று தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அண்மையில் குற்றம்சாட்டியுள்ளார். வாக்காளர் பட்டியல் நீக்கமே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம் என்ற விவாதம் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக எழுந்துள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும், எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டு பிசினஸ்லைன் (Businessline) வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு முடிவுகள் சில சுவாரசியமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளன. குறைந்த அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் த.வெ.க வெற்றிபெறப் போராடியுள்ள நிலையில், அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் த.வெ.க அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும், இந்த எண்களை மட்டுமே வைத்து எந்த முடிவிற்கும் வரக்கூடாது என்று அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
SIR புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
2026 ஏப்ரல் மாத இறுதி வாக்காளர் பட்டியலையும், எஸ்.ஐ.ஆர் பணிக்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த தகவல்கள்;
10,000-க்கும் குறைவான நீக்கங்கள் (19 தொகுதிகள்): 10,000 வாக்காளர்கள் வரை மட்டுமே நீக்கப்பட்ட 19 தொகுதிகளில், த.வெ.க வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. தி.மு.க 7, அ.தி.மு.க 6, பிற கட்சிகள் 4 இடங்களைக் கைப்பற்றின.
10,000 முதல் 20,000 வரை நீக்கங்கள் (80 தொகுதிகள்): இதில் த.வெ.க 22, அ.தி.மு.க 24, திமு..க 20, பிற கட்சிகள் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
த.வெ.க அசுர வெற்றி பெற்றது எப்படி?
20,000 முதல் 30,000 வரை நீக்கங்கள் (66 தொகுதிகள்): இதில் த.வெ.க 32 தொகுதிகளையும், தி.மு.க 21, அ.தி.மு.க 11, பிற கட்சிகள் 2 தொகுதிகளையும் வென்றன.
30,000 முதல் 50,000 வரை நீக்கங்கள் (37 தொகுதிகள்): வாக்காளர் நீக்கம் அதிகரிக்க அதிகரிக்க த.வெ.க-வின் கை ஓங்கியுள்ளது. இந்த 37 தொகுதிகளில் தவெக 24, திமுக 8, அதிமுக 5 இடங்களில் வென்றன.
50,000 முதல் 80,000 வரை நீக்கங்கள் (22 தொகுதிகள்): இதில் தவெக 18 இடங்களிலும், திமுக 3, அதிமுக 1 இடத்திலும் மட்டுமே வென்றன.
80,000-க்கும் அதிகமான நீக்கங்கள் (10 தொகுதிகள்): 80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளையுமே தவெக முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும், 2021 தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 27,000 வாக்காளர்களும், திமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 31,000 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
நிபுணர்களின் கருத்து என்ன?
பரகலா பிரபாகர் (பொருளாதார நிபுணர், அரசியல் விமர்சகர்): வாக்காளர் நீக்கத்தை ஒரு குறிப்பிட்ட கட்சியின் வாக்குகளாகப் பார்க்க முடியாது. நீக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. இதை நாம் அடிப்படைத் தளத்தில் அணுக வேண்டும். தகுதியுள்ள ஒரு குடிமகனின் பெயர்கூட எப்படி வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடலாம்? வெற்றியாளர்களையும் தோல்வியாளர்களையும் தொடர்புபடுத்துவதை விட இதுவே முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும்.
இந்த எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை வாக்குரிமை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என 2 விதமான இந்தியர்களை உருவாக்குகிறது. சில தேர்தல் சுழற்சிகளுக்குப் பிறகு இது இந்தியாவின் சமூக அமைப்பையே மாற்றியமைத்துவிடும். தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், சவர்ணர் அல்லாத இந்துக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயர்களே பெருமளவில் நீக்கப்படுவதால், இது படிப்படியாக ஒரு 'இந்து ராஷ்டிரத்தை' உருவாக்குவதை நோக்கியே நகரும்" என்று எச்சரித்துள்ளார்.
பத்ரி சேஷாத்ரி (அரசியல் ஆய்வாளர்): ஒரு குறிப்பிட்ட கட்சியின் வாக்காளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நீக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. இதற்கு எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. களத்தில் இரு முக்கியக் கட்சிகளின் முகவர்களும் (Booth Agents) இருந்தனர். மேற்கு வங்கத்தில் இது தொடர்பாகத் தொடர் புகார்கள் எழுந்தன; ஆனால் தமிழ்நாட்டில் களத்திலிருந்து அப்படி எந்தவொரு புகாரும் வரவில்லை. என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு
பி. வில்சன் (தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்): தி.மு.க வாக்காளர்கள் திட்டமிட்டுத் குறி வைக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.வை களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய முழுமையான சதித்திட்டம் இது என்று குற்றம்சாட்டினார்.
விவேக் கணநாதன் (த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்): இந்த ஒப்பீடு ஒரு தற்செயலான நிகழ்வுதானே தவிர, உண்மை அதுவல்ல. இதில் ஆராய்வதற்கு ஒன்றுமில்லை. திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் மீது நம்பிக்கை இழந்ததால், அவர்களின் பாரம்பரிய வாக்காளர்கள் எங்கள் பக்கம் வந்துள்ளனர். மக்கள் எங்களுக்கு வாக்களித்ததே எங்கள் வெற்றிக்குக் காரணம் என்று மறுப்புத் தெரிவித்தார்.

