- Home
- Tamil Nadu News
- மதுரை மக்களே கொண்டாட்டத்துக்கு ரெடியா..? மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்
மதுரை மக்களே கொண்டாட்டத்துக்கு ரெடியா..? மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் அனைத்தும் நிறைவடையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அழகர் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 3707 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குறிப்பாக பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில்களில் திமுக ஆட்சியில் தான் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அந்த அடிப்படையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை தொடர்ந்து தமிழக அரசு விரைவுபடுத்தி வருகிறது.
கோவில் திருப்பணி
மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 186 பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகளின் மொத்த மதிப்பு 23 கோடியே 70 லட்ச ரூபாய் ஆகும். திருக்கோவில் நிதி மூலம் 8 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 117 பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. உபயதாரர் வழங்கிய நிதி 14 கோடியே 80 லட்சம் செலவில் 69 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
சீரமைப்பு பணிகள்
கடந்த 2018 ஆம் ஆண்டு தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீர வசந்த ராயர் மண்டபத்தை மீண்டும் சேர வைப்பதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஒரே அளவாக சுமார் 15 அடி நீளமுள்ள கற்கள் நமது குவாரிகளில் கிடைப்பது மிகுந்த சவாலாக உள்ளது. இதற்கு தேவைப்படும் தூண்களின் எண்ணிக்கை 79. இதுவரையில் நிர்மாணிக்கப்பட்ட தூண்களின் எண்ணிக்கை 18. இந்த மண்டபத்தை சீரமைப்பதற்கான தொகை 35 கோடியே 30 லட்சம் ரூபாய் ஆகும். வரவேண்டிய 61 தூண்கள் தயார் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
பிப்ரவரி மாதத்திற்குள் கும்பாபிஷேகம்
வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கான குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். வீர வசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ளலாமா என்பது குறித்து கோவில்பட்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். அவ்வாறு அவர்கள் ஒப்புதல் அளித்தால் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட 18 உப கோவில்கள் உள்ளன.
இவற்றில் ஒன்பது கோவில்களுக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சி உள்ள அனைத்து உப கோவில்களுக்கான குடமுழுக்கு பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு பெறும். தேர்தலுக்காக நாங்கள் இந்த பணியை மேற்கொள்ளவில்லை. தேர்தல் இல்லை என்றாலும் எங்களின் ஆன்மிக பணி தொடரும். திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான இறுதி வடிவம் கிடைத்தவுடன் ஒப்பந்தப்பு புள்ளி கோரப்படும். கரூர் விவகாரத்தில் நீதிமன்ற கருத்து தான் எங்களுடைய பதில்' என்றார்.