பெண் விவசாயிகளுக்கான இயந்திர வாடகை மையங்கள் மூலம் இவ்வளவு கோடி வசூலா? தமிழக அரசு முக்கிய தகவல்!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரகப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
Udhayanidhi Stalin
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது ஊரகப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி, அவர்களின் வறுமையை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
TNCDW
விவசாய கருவிகள் மற்றும் உழவர் உபகரணங்களை மலிவு விலையில் வாடகைக்கு வழங்குவதற்காக இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் செயல்படும் இந்த மையங்கள் சிறு மற்றும் குறு மகளிர் விவசாயிகள் தங்களுடைய விளை நிலங்களில் சாகுபடி பணிகளை காலதாமதமின்றி மேற்கொள்ள உதவுகின்றன. மேலும் இவை மகளிர் விவசாயிகளின் பணிச் சுமையை குறைக்கின்றன.
Tamilnadu
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இதுவரை 32 மாவட்டங்களில் 251 இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 2,605 கருவி வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் மூலம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், சுமார் 1 கோடியே 14 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் பெற்றுள்ளன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த நடவடிக்கைகளால் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிர், விவசாயத் தொழிலாளர்களாக இருந்து பயிர் சாகுபடியாளராகவும், விவசாய தொழில் முனைவோராகவும் மிக வேகமாக முன்னேறி வருகின்றனர். பண்ணை சார்ந்த வாழ்வாதார செயல்பாடுகளின் கீழ் பயிற்சி வழங்குதல், குழுக்கள் உருவாக்குதல் மற்றும் தொகுப்பு நடவடிக்கைகள் மூலம் சிறந்த பண்ணை செயல்பாடுகளை மேற்கொண்டு அதிக மகசூல் மற்றும் உரிய விலை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Custome Hiring Centres
தரிசு நிலங்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் முதன்மைத் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து தொகுப்பு அணுகுமுறை மூலம் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளின் மேற்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் செயல்படும் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் உள்ளன.
Machine rental
இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் விவசாய செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன. இந்த மையங்கள் வழியாக, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கருவிகளை வாங்கும் செலவைக் குறைத்து, குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெளிச்சந்தை வாடகையை விட குறைவான வாடகைத் தொகை வேளாண் இயந்திரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர வாடகை மையங்கள் மற்றும் கருவி வங்கிகள் மூலம் வேளாண்மையில் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் துணைக் கருவிகள், குறிப்பாக டிராக்டர்கள், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவிலான வாடகையில் வழங்கப்படுகின்றன.