- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 நேரத்தில் நீலகிரி முதல் தேனி வரை! இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 நேரத்தில் நீலகிரி முதல் தேனி வரை! இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் தீவிர மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் தீவிர மழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி அவலாஞ்சியில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகமான கனமழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் வடமேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா- மேற்கு வங்கம் கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மழை
மேலும், மேற்கு திசை காற்று காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.