கோவை மருதமலை கோயில் வேல் திருட்டு.! தப்பிய சாமியார் -சிக்கியது எப்படி.?
மருதமலை முருகன் கோயிலில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி வேல் மாயமானது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்; சேலத்தில் வெள்ளியை விற்று தட்டு, குவளை வாங்கியது அம்பலம்.

Maruthamalai murugan temple Vel theft : முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படும் மருதமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து மட்டுமல்ல பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி மருதமலை அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
maruthamalai murugan temple
4 லட்சம் மதிப்பிலான வேல் திருட்டு
இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, சுமார் 4 லட்சம் மதிப்பிலான வேல் உள்ளது. இந்த வேல் திடீரென மாயமானது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசாரும் வேலை கண்டுபிடிக்க தீவிர நடவடிகை எடுத்தனர்.
இதனிடையே வேல் திருடு போனது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த அறநிலையத்துறை தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லையெனவும், மருதமலை திருக்கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Maruthamalai temple theft
சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
இதனையடுத்து தியான மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்த போது சாமியார் வேடத்தில் வந்த ஒருவன் அந்த வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேல் ஒன்றை சாமியார் ஒருவர் திருடியதாக வடவள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இதனை தொடர்ந்து யார் அந்த சாமியார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தது.
Maruthamalai temple theft
சாமியார் சிக்கியது எப்படி.?
இதனையடுத்து தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை போலீசார் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இரண்டரை கிலோ வெள்ளி விலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா, அதனை சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையான (ஜிஆர்டி தங்க மாளிகையில்) விற்று வெள்ளி தட்டு, குவளை வாங்கியுள்ளார். இதன் பின்னர் திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்துள்ளதாக கூறினர்.