- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! தமிழக அரசுக்கு என்ஜிஓ சங்கம் சொன்ன சூப்பர் யோசனை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்! தமிழக அரசுக்கு என்ஜிஓ சங்கம் சொன்ன சூப்பர் யோசனை
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்தார். தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். இதனையடுத்து, தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதி
திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் இதை நிறைவேற்றப்படவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதற்காக 4 கட்டங்களாக அரசு ஊழியர்கள் சங்கத்திடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது.
புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
இதில் 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் என்ஜிஓ சங்க நிர்வாகிகள் ககன்சிங் பேடி தலைமையிலான குழுவை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தபின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அலுவலர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதம் இருக்கும் என தெரிவித்துள்ளது.
என்.ஜி.ஓ.சங்கம்
என்.ஜி.ஓ.,சங்கம் யோசனை மத்திய அரசு வழங்கும் 18.5 சதவீதத்தை மாதந்தோறும் மாநில அரசே வழங்கி அதனை ஓய்வு பெறும் காலம் வரை தொடர்ந்து சேர்த்து வைக்க வேண்டும். ஓய்வு பெறும் காலத்தில் அந்த மொத்த தொகையை, வட்டியுடன் சேர்த்தாலே, பழைய ஓய்வூதிய திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். இதனால் நிதிச்சுமை அரசுக்கு ஏற்படாது. இதன் காரணமாக பழைய ஒய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.