மகளிர் சுய உதவி குழு எதிர்பார்த்த நாள் வந்தாச்சு.! தேதி குறித்த தமிழக அரசு
தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்குகிறது. இதில் குறைந்த வட்டி கடன்கள், சுழல் நிதி, ட்ரோன்கள் வழங்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் அடங்கும். சென்னையில் இயற்கை சந்தை நடத்தப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழுவிற்கான சலுகைகள்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் நிதி உதவிகளையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற வசதி செய்யப்படுகிறது. கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் குழுக்களுக்கு 7%க்கு மேல் உள்ள வட்டி தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 6 மாதங்கள் செயல்பட்டு, தகுதி பெற்ற குழுக்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சுழல் நிதி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 2023-24 முதல் 2025-26 வரை 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படுகின்றன. ட்ரோன் மற்றும் உபகரணங்களுக்கு 80% மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகை கடனாக பெறப்படலாம்.
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அரசின் உதவிகள்
மேலும் மகளிர் சுய குழு உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுவினர் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உள்ளூர் கண்காட்சிகள் மற்றும் மதி சந்தை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் (Natural Bazaar) இயற்கை சந்தை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவி குழு- இயற்கை சந்தை
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தை (Natural Bazaar) நடத்தப்படுகிறது. இம்மாதம் 02.08.2025 (சனிக்கிழமை) மற்றும் 03.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் இயற்கை சந்தை நடைபெறவுள்ளது.
இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள். காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இயற்கை சந்தை- பொருட்கள் விற்பனை கண்காட்சி
மேலும் இந்த இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருட்களும் கிடைக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் இயற்கை சந்தையைப் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றோம் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.