- Home
- Tamil Nadu News
- அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் பாஜக..? இபிஎஸ் இல்லத்தில் நயினார் ஆலோசனை..
அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் பாஜக..? இபிஎஸ் இல்லத்தில் நயினார் ஆலோசனை..
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் சந்திப்பு
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள இபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பாஜக பலமாக இருப்பதாகக் கருதப்படும் தொகுதிகளைப் பட்டியலிட்டு அந்த தொகுதிகளை பாஜகவினர் கேட்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன?
இந்த நிலையில் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக இருக்கிறது. பிரதமரின் வருகை தொடர்பாக பழனிசாமியுடன் ஆலோசிக்கப்பட்டது. இன்றைய ஆலோசனை சுமூகமாக நிறைவு பெற்ற நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக, பாஜக போட்டியிடும் இடங்கள் தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
56 தொகுதிகளை டார்கெட் செய்யும் பாஜக..?
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த தேர்தல்களில் பாஜக இரண்டாம் இடம் அல்லது 3வது இடம் பிடித்த தொகுதிகளைப் பட்டியலிட்டு அந்த தொகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக நிர்பந்திப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால், நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவது நோக்கம் கிடையாது. கூட்டணியை பலப்படுத்தி திமுகவை வீழ்த்துவதே ஒற்றை நோக்கமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

